top of page

விசுவாசியும் அவிசுவாசியும் ஒருவருக்கொருவர் உரையாடுதல் 

விசுவாசி:

வாலிப தம்பி இயேசு கிறிஸ்து என்கிற ஆலயத்திற்கு செல்கிற பேருந்து சென்று விட்டதா?

அவிசுவாசி:

ஐயா அந்த ஆலயம் எங்கு இருக்கிறது, இதுவரைக்கும் எந்த ஒரு பேருந்தும் சென்றதாக தெரியவில்லை

விசுவாசி:

இந்த ஆலயம் மிகவும் பிரபலமானது இங்கு செல்கிறவர்கள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை அவர்கள் நிச்சயமாக பரலோகத்திற்குத் தான் செல்வார்கள்

அவிசுவாசி:

ஐயா இந்த ஆலயத்திற்கு சென்றால் தான் பரலோகத்திற்கு செல்ல முடியுமா? ஏன் அனேகர் நல்லவர்களாய் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள், அவர்களும் நிச்சயமாக பரலோகத்திற்கு செல்ல முடியும்

விசுவாசி:

தம்பி, நீ நினைக்கிறது போல் நாம் வேலையிலோ அல்லது மற்ற எந்த காரியங்களிலோ உலகத்திற்கு முன்னாடி நல்லவர்களாய் இருந்து விட்டால் அவர்கள் பரலோகத்திற்கு சென்று விட முடியாது. ஏனென்றால் யாருடைய அந்தரங்க வாழ்க்கையும் இந்த உலகத்திற்கு தெரியாது.

அவிசுவாசி:

அப்படியென்றால் யார் தான் நீதிமான்? யார் பரலோகத்திற்கு செல்லுவார்கள்?

விசுவாசி:

தம்பி இந்த உலகத்தில் ஒருவரும் நீதிமான் இல்லை என்று வேதம் சொல்லுகிறது, அதுமட்டுமல்லாமல் கர்த்தர் படைத்த முதலாவது அதாவது ஆதி மனிதன் பாவம் செய்ததின் நிமித்தம் அனைவரும் பாவிகளாக மாற்றப்பட்டோம். எப்படியென்றால் ஒவ்வொரு மனுஷரிடத்திலும் இந்த பாவ மனிதனின் உள்ளமே காணப்படுகிறது. நாம் பரலோகத்திற்கு செல்ல வேண்டுமானால் முதலாவது நாம் கர்த்தருடைய பிள்ளையாக மாற வேண்டும்

அவிசுவாசி:

எப்படி ஐயா நாம் கர்த்தருடைய பிள்ளையாக மாற முடியும்?

விசுவாசி:

தம்பி நாம் முதலில் நம்மை பாவி என்று ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தேவை ஒரு மனந்திரும்புகிற உள்ளம். இதன் பிறகு நம்முடைய பாவத்தையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் முன்பாக அறிக்கை செய்ய வேண்டும்.

அவிசுவாசி:

இப்படி செய்து விட்டால் நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறி விடுவோமா ஐயா

விசுவாசி:

தம்பி இல்லை நாம் அவர் சொன்ன சத்தியத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் எப்படியென்றால் ஜலத்தினாலும் ஆவியினாலும் ஞானஸ் நானம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவிசுவாசி:

ஐயா ஜலத்தினால், ஆவியினாலும் ஞானஸ் நானம் எடுத்துக் கொள்ளுதல் என்றால் என்ன? எனக்கு விவரித்து சொல்ல முடியுமா?

விசுவாசி:

தம்பி நாம் தண்ணீர் நிறைந்த இடத்திற்கு சென்று பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். இது ஜலத்தினால் ஆன ஞானஸ் நானம். அடுத்ததாக, நாம் கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருக்கும் போது அவர் தம்முடைய ஆவியினால் நம்மை நிரப்புவார் அதாவது அவர் ஆவியாக நமக்குள் வாசம் செய்வார் இதற்கான பொதுவான அடையாளம் அதாவது கர்த்தருடைய ஆவி நமக்குள் இருக்கிறது என்பதற்காக அடையாளம் அன்னிய பாஷையாகும்.

அவிசுவாசி:

ஐயா இதைக் கேட்பதற்கே மிகவும் ஆச்சரியமாய் இருக்கிறது ஆனாலும் இத்தகைய காரியத்தை என்னால் முழுவதுமாக நம்பமுடியவில்லையே?

விசுவாசி:

தம்பி, ஒரு மாமிச சுபாவம் உள்ள மனுஷனால் இத்தகைய காரியத்தை நம்புவது என்பது முடியாத காரியம்தான், காற்றை என்றைக்காவது பார்த்திருக்கிறோமா? அது ஏற்படுத்துகிற விளைவுகளை பார்க்கும் போது இதுதான் காற்று என்று நம்புகிறோம். இதேபோலத்தான், முதலாவது நீ இயேசுவை ஏற்றுக் கொள் அதன்பிறகு நான் சொன்ன எல்லாவற்றையும் உனக்கு அவரே வெளிப்படுத்துவார்.

அவிசுவாசி:

ஐயா நிச்சயமாக இந்த இயேசு கிறிஸ்துவை என்னுடைய தெய்வமாக ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் அவர் நீங்கள் சொன்ன காரியங்களை வெளிப்படுத்தாவிட்டால் மறுபடியுமாக பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன்

விசுவாசி:

தம்பி நிச்சயமாக இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தி உன்னை தம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்வார் என்பதில் எனக்கு சிறுதும் சந்தேகமேயில்லை. ஏனென்றால் அவர் ஜீவனுள்ள தெய்வம் என்பதை மறந்து விடாதீர்கள்.

bottom of page