முதலாவதுதேவனோடு ஐக்கியம்
இன்றைக்கு நாம் நம்மை சுற்றியுள்ள தேவையினால் ஆட்கொள்ளப்பட்டு தேவனிடம் ஐக்கியம் கொள்ள நேரமில்லாமல் போய்விட்டோம். ஆனால் தேவை ஏராளம் என்ற பின்னணியில் நாம் செய்த ஊழியத்தின் பலன் என்ன? ஒரு வேளை நாம் ஏராளமான ஊழியங்களை செய்திருக்கலாம் ஆனால் அதன் தரமோ மோசமானதாக இருக்க கூடும். இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேகரிடம் வேத ஞானங்களும் உபதேச அறிவும் நிறைய இருந்தாலும் அவர்களிடம் தேவ வல்லமை இல்லை. எவ்வளவு தான் ஊழியம் செய்திருந்தாலும் அவர்கள் உள்ளத்திலிருந்து ஜீவநதிகள் புரண்டோடவில்லை.
ஏனென்றால்? இவர்கள் அதிகமாக ஊழியம் செய்கிறார்கள் ஆனால் தேவனோடு ஐக்கியம் கொள்வதில்லை. மேலும் இவர்கள் தங்கள் ஊழியங்களை அதிகரித்து கொண்டே செல்வதால் தங்கள் ஜீவியத்தில் ஜீவதண்ணீருக்கு பதில் வறட்சியாகவே காணப்படுகிறார்கள்,ஆனால் இயேசுவின் வார்த்தையோ மிகத் தெளிவாக "என்னிடத்தில் விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்". தேவனோடு ஐக்கியம் கொள்ளாமல் வறட்சியாக காணப்படுகிற ஊழியக்காரர்கள்.
ஜனங்களை கவர்சிக்கவே விரும்புகிறார்கள். இவர்கள் பேசுவதை கேட்கிற ஜனங்களும் உணர்வடையாமலும் உயிர்ப்பிக்கப்படாமலும் போகிறார்கள். இயேசு மார்த்தாளை பார்த்து நீ அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய் என்றார். மார்த்தாள் தனக்காக இல்லாமல் ஆண்டவருக்கும் சீஷர்களுக்கும் சமயலறையில் சுயநலமில்லாமல் மிகுந்த தியாகத்துடன் வியர்வை சிந்த ஊழியம் செய்து கொண்டிருந்தாள்,அந்த வேளையில் இதற்க்கு மேலாக அவள் செய்திட கூடிய ஊழியம் வேறு ஏதும் இருக்க முடியாது,அவளுடைய ஊழியம் முழுக்க சுயநலமற்றது,இன்றைக்கு அநேக கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் செய்வது போல அவள் பணத்துக்கோ சம்பளத்துக்கோ ஊழியம் செய்யவே இல்லை.
ஆனால் மார்தாளின் சிந்தையிலிருந்த எண்ணம் மரியாள் ஒரு வேலையும் செய்யாமல் ஆண்டவரின் பாதப்படியில் அமர்ந்து அவரை கவனித்து கேட்டு கொண்டிருக்கிறாளே என்பது தான். இங்கு தான் இயேசு ஆணித்தரமாக மரியாள் செய்து கொண்டிருக்கும் இந்த செயலே மிக முக்கியமானதாகும் இது ஒன்றே இப்போது மிகவும் தேவை என்று சொல்லிவிட்டார்.இன்றைக்கு நாம் நமது தேவைகளுக்காகவும் ஊழியங்களுக்காகவுஐம் தேவனோடு இருந்த ஐக்கியத்தை இழந்து போய் நிற்கிறோம்.இப்படியே இருந்தால் நாம் தேவனோடு உள்ள அன்பை இழந்து ஊழியத்தையும் உலகத்தையும் நேசிக்க ஆரம்பித்து விடுவோம்.
எனவே தேவையானது ஒன்றே....,அவர் சமூகத்தில் காத்திருப்போம். அவரோடு இணைந்து நடப்போம் பின்பு அவர் சித்தத்தை அறிந்து கொண்டு அவருக்காக ஊழியம் செய்வோம். (கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40-31)ஆமென்.