top of page

ஊழியம் செய்தால் பிதா கனப்படுத்துவாரா??

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். யோவான் 12-26

 

 

இந்த வசனத்தின் படி ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், என்னை பின்பற்ற கடவன் நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான் என்று இரண்டு முக்கிய காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு வசனத்தை யாரும் பேச  மாட்டார்கள். ஆனால் பிதாவானவர் கனம் பண்ணுவார் என்று சொல்லப்பட்டிருக்கிற  வசனத்தை மாத்திரம் எடுத்து ஆசீர்வாதத்தை சொல்வார்கள்.

 

அதே அதிகாரத்தில்  28 வது வசனத்திலே பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்று இயேசு சொல்வதை பார்க்கலாம்.

 

தேவனுடைய ஊழியத்தை செய்ய அழைக்கப்பட்ட ஒவ்வொரு வேலைக்காரனும்    தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறான், ஊழியம் செய்த பிறகு  அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். லூக்கா 17-10

 

 ஆனால், இதற்கு மாறாக நாங்கள் பெரிய காரியங்களை செய்தோம் என்று தங்களுடைய பெயரை பெருமை படுத்தி  கொண்டிருக்கிற ஊழியக்காரர்கள் தான் அதிகம்.  ஊழியம் செய்யும்போது   தெரிந்தோ தெரியாமலோ தங்களை அறியாமல் தங்களை தாங்களே மேன்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.

 

 

இன்றைக்கு அநேக   ஊழியக்காரர்கள் தன்னை தானே வெறுமையாக்கிய இயேசுவின் மனத்தாழ்மையின் நுகத்துக்கு  பதிலாக பெருமை என்கிற அடிமைத்தனத்தின் நுகத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்.  இவர்கள் சந்திப்பின் நாளிலே தேவனுக்கு முன்பாக நாங்கள் உமது நாமத்திலே இதை செய்தோம் அதை செய்தோம் என்று பெருமையாக பேசுவதை பார்க்கலாம்.

 

ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவன் என்னை பின்பற்றி வர கடவன் என்று இயேசு சொன்னார். ஆனால் இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடை பின்பற்றும் ஊழியக்காரர்கள் மிகவும் குறைவு. 

 

 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16-2

 

ஒரு அடிமை தான் தன்னை தானே வெறுக்கிறவன். ஒரு அடிமையாக ஒரு வேலைக்காரனாக தங்களை வெறுமையாக்கி இயேசுவின் அடிச்சுவடை பின்பற்றுகிற ஊழியக்காரர்கள் இன்றைக்கும் எங்கோ மறைந்திருந்து மகிமையான ஊழியத்தை செய்கிறார்கள். இவர்கள் தான் தங்களை ஒருக்காலும் உயர்த்தி கொள்ளாத உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்கள்.

 

ஊழியக்காரர்களே...

 

தன்னை தானே புகழுகிறவன் உத்தமனல்ல என்கிற வசனத்தை அறிந்திருக்கிறீர்களா?

 

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2 கொரிந்தியர் 10-18

 

அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.  பிலிப்பியர் 2:8

 

2 தீமோ 2-15 ல் - நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.  என்று பவுல் எச்சரிக்கிறார்.

 

 

மேலும், அடுத்த எச்சரிப்பு என்னவெனில்,  

 

உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.  1 தீமோத்தேயு 4:16

 

 

ஜனங்களுக்கு கிறிஸ்துவின் உபதேசத்தை போதிக்கிற ஊழியக்காரர்களே!!! நீங்கள் போதிக்கிற வசனத்துக்கு நீங்களே கீழ்ப்படியாவிட்டால் போதிக்கிற உங்களுக்கே இரட்சிப்பு இல்லை என்கிற எச்சரிப்பை விளங்கி கொண்டீர்களா?

 

என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-1

 

2 யோவான் 9 வது வசனத்தின் படி கிறிஸ்துவின் உபதேசத்தை போதித்து விட்டு அதில் நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தின் படி நடப்பது தான் அவரை பின்பற்றுவது.

 

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.  1 யோவான் 2:6

 

இயேசு நடந்தது போல நடந்து அவருடைய அடிச்சுவடை பின்பற்றி ஊழியம் செய்கிற ஊழியக்கரனின் பாதங்கள் தான் மிகவும் அழகானவைகள்.

 

மத்தேயு 7-23 ல் ஊழியம் செய்த அநேகரைப் பார்த்து உங்களை அறியேன் என்று இயேசு எதற்காக சொன்னார்.கீழே உள்ள வசனத்தை கவனமாக படியுங்கள்,  அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.  1 யோவான் 2:3-4.

 

சந்திப்பின் நாளிலே அவருடைய உபதேசத்தை பின்பற்றாமல் ஊழியம் செய்த அநேகரை பார்த்து அக்கிரம சிந்தை காரர்களே என்று இயேசு அழைக்கும் காலம் வரும்.

 

 

இயேசு பிலாத்துவிடம் சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் என்னை பின்பற்றக்கடவன் என்கிற வசனத்தை எச்சரிப்பாக எடுத்து கொள்ளுங்கள், பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவப்பணியை செய்யுங்கள்.

 

நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய காரனும் இருப்பான் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார் அவர் பரலோகத்துக்கு போய் தேவனுடைய வழுதுபாரிசத்தில் இருக்கிறார்.

 

நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.  பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.  கொலோசெயர் 3:1,2

 

நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.  யோவான் 14:4

 

இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேக ஊழியக்காரர்கள்  பூமிக்கு அடுத்தவைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இயேசு கிறிஸ்து,முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும் போது எல்லாம் கூட கொடுக்கப்படும் என்றார்.

 

ஆனால் இவர்களோ  உலகத்துக்குறிய காரியங்களுக்காக ஊழியங்களை அமைத்து கொள்கிறார்கள். உலகத்தான்களாக இருக்கிறார்கள்.

 

பரலோக அழைப்பை பெற்று கொண்ட பல ஊழியக்காரர்கள் மனுஷமார்க்கமாக நடக்க ஆரம்பித்து பூமிக்குறியவைகளை நாட ஆரம்பித்து விட்டார்கள்.

 

இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்தாலும் எப்போதும் பிதாவோடு தொடர்பு கொண்டிருந்தார்.அவரது சித்தம் இல்லாமல் ஒன்றையும் அவர் சுயமாக செய்யவில்லை.

சிலுவையின் முடிவு பரியந்தம் கீழ்படிந்தவராக இருந்தார்.நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதாக கூறினார்.

 

இயேசு கிறிஸ்து  சீஷர்களை குறித்து பிதாவிடம்  சொன்னது

 

நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. யோவான் 17-16

 

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன், நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல, ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. யோவான் 17-14

 

பிரியமான ஊழியக்காரர்களே!

 

பரலோகத்துக்காக ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட நீங்கள்  இரண்டு எஜமானுக்கு அதாவது பரலோகத்துக்கும் உலகத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 1 யோவான் 2

 

இன்றைக்கு அநேக ஊழியர்கள்  ஜனங்களை கவர்வதற்க்காகவே இணையத்தளங்களில் நாங்கள் அதை செய்தோம் இதை செய்தோம் அங்கு போனோம் இங்கு போனோம் என்று உலகத்தாரைப் போல செய்தி வெளியிடுகிறார்கள்.

 

இன்றைக்கு ஒரு ஊழியக்காரனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்றால் இணையத்தளத்தில் உங்கள் செய்தி இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

 

ஊழியம் செய்த பிறகு அப்பிரயோஜனமான ஊழியக்காரன் என்று சொல்ல சொன்ன எஜமானனின் கட்டளையை இன்னும் நாம் உணரவில்லையே? தங்களை தாங்களே உயர்த்தி கொள்ள உலகத்தாரை போல சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.  லூக்கா 13:25

 

நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை அறியேன் என்று இயேசு சொன்னதை கவனித்தீர்களா?அடுத்ததாக 27 ம் வசனத்தில்

 

நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  லூக்கா 13:27

 

ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட நீங்கள் உலகத்தில் இருந்தாலும்  உங்களுடைய இணைப்பு  செடியாகிய கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும்.

 

 

ஒருவன் ஊழியம் செய்தால் முதலாவது இயேசுவின் அடிச்சுவடை பின்பற்ற வேண்டும். அடுத்து இயேசுவோடு இணைந்து அவருடைய  உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுது மாத்திரமே பிதாவானவர் கனம் பண்ணுவார்.

 

 

நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.  லூக்கா 13:28

bottom of page