உபத்திரவமா-திடன் கொள் -உலகத்தை ஜெயித்தவர் உன்னோடு (அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள், நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள், இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள், இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 52:5-6.
தேசத்தில் உங்களுக்கு எதிராக வரும் உபத்திரவத்தை தீர்க்கதரிசன கண்களோடு பாருங்கள்.உங்களுக்கு எதிராக வரும் உபத்திரவங்களை சர்வ வல்லமையுள்ள தேவனால் தடுத்து நிறுத்த முடியும்.ஊழியங்களுக்கும் சபைக்கும் எதிராக வரும் உபத்திரவங்களை தேவன் அனுமதித்தார் என்றால் அது நன்மைக்கேதுவாக தான் இருக்கும்.இன்றைக்கு சபைக்கு எதிராகவும் ஊழியங்களுக்கு எதிராகவும் பேசும் மனிதர்களை பார்த்து பயந்து இணையத்தளத்தில் பதிவிட்டு அவர்களை பெரியவர்களாக்காதீர்கள். எங்களுக்கு விரோதமாக எத்தனை சட்டங்கள் கொண்டு வந்தாலும் உலகத்தில் இருப்பவனை காட்டிலும் என் தேவன் பெரியவர் அவர் பெரிய காரியங்களை செய்வார் என்று தைரியமாக சொல்லுங்கள்.
அன்றைக்கு இஸ்ரவேலின் தேவனை நிந்தித்த கோலியாத்துக்கு எதிராக சர்வ வல்லவருடைய நாமத்தில் தாவீது கோலியாத்தை வீழ்த்தவில்லையா? அன்றைக்கு கானான் தேசத்தை வேவு பார்த்து சோர்ந்து போன அவ்விசுவாசமுள்ள அந்த பத்து பேரை போல இன்றைக்கு அவ்விசுவாசமான செய்திகளை இணையதளத்தில் பரப்பி கொண்டி ருக்கிறோம்.சபைகளை உபத்திரபடுத்திய சவுலை தேவன் மாற்றினாரே?நம்மை ஆளுகிறவர்களுக்கு மேலான அதாவது பரம அதிகாரங்களை உடையவர் நம் தேவன்.அவர் ராஜாக்களுக்கெல்லாம் அதிபதி என்று வேதம் சொல்கிறது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.நீதிமொழிகள் 8-15.
இவர்கள் தேசத்தை ஆள தேவன் அனுமதித்ததற்கு ஒரு நோக்கம் உண்டு.நான் உபத்திரவப்பட்டது நல்லது,அதனால் உம் பிரமாணங்களை கற்று கொண்டேன் என்று தாவீது சொல்கிறான்.ஆதி அப்போஸ்தலர் நாள்களில் சபை உபத்திரவத்துக்குள் கடந்து போனது.ஆனால் மறுப்பக்கம் ஆத்தும ஆதாயத்தோடு கூடிய ஒரு பெரிய எழுப்புதல் நடந்தது. கடைசி காலத்தை பற்றி இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனங்களில் முக்கியமான ஒன்று உபத்திரவம் என்பதை மறந்து விட வேண்டாம்.மத் 24 8,9 ல் அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்பு கொடுத்து உங்களை கொலை செய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்ன காரியங்கள் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சுவிசேஷம் அறிவிக்கப்படுவது நின்று விடவில்லை.ஒரு தேசத்தில் ஊழியங்களுக்கு எதிராக உபத்திரவங்கள் வரும் போது எழுப்புதலின் அத்தியாயம் தொடங்குகிறது என்று அர்த்தம்.அன்றைக்கு உபத்திரவத்தின் நாள்களில் ஆதி அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியில் நிறைந்து தேவபெலத்தை பெற்று கொண்டார்கள். அவர்கள் எப்பொழுதும் உபவாசத்தோடும் ஜெபத்தோடும் தேவசமூகத்தில் தரித்திருந்தார்கள்.அவர்கள் வெளியே வந்த போது அவர்கள் உடையிலிருந்தும் நிழலிருந்தும் வல்லமை புறப்பட்டது.அநேக அற்புதங்கள் நடந்தது அவர்கள் பிரசங்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இயற்க்கைக்கு அப்பாற்பட்ட அற்புத அடையாளங்கள் நடந்தன.
இன்றைக்கு பல ஊழியக்காரர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து பெற்று கொள்ள கூடிய தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கை விட்டு விட்டு ஓடி ஓடி ஊழியம் செய்து கடைசியில் சோர்ந்து போய்விட்டார்கள். இன்னும் பலர் ஆத்தும ஆதாயத்துக்கு பதிலாக காணிக்கைக்காகவும் எண்ணிக்கைக்காகவும் தங்களை உயர்த்தி கொள்வதற்காகவும் தேவ சித்தத்திற்கு மாறான காரியங்களை செய்து தேவ திட்டத்தை விட்டு விலகி போய்விட்டார்கள் தேவ பெலன் இல்லாததால் இவர்கள் சுவிசேஷத்துக்கு எதிரான சட்டங்களையும் சுவிசேஷத்துக்கு எதிராக பேசுகிறவர்களையும் பார்த்து பயந்து போய் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைக்கு தேவன் தன் ஜனங்களை பிரித்தெடுக்கிறார் தேசத்தின் அறுவருப்புகளினிமித்தம் கண்ணீரோடு ஜெபிப்பவர்கள் நெற்றியில் முத்திரை போடப்படுகிறது தேவ வல்லமையை தரித்து கொண்ட கடைசி கால ஜெப வீரர்கள்,கடைசி கால யுத்த வீரர்கள் எழும்புவார்கள். எழுப்புதலுக்கு முன்பாக சபைகள் சுத்திகரிக்கப்பட வேண்டும். இனி பணத்துக்காகவும் இழிவான ஆதாயத்துக்காகவும் யாரும் ஊழியம் செய்ய முடியாது. இயேசுவுக்காக அவரை மறுதலிக்காமல் ஜீவனையே கொடுக்க முன் வரும் உண்மையும் உத்தமுமானவர்களை அவர் கண்கள் காண்கின்றது. (தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.மாற்கு 8-35) ல் இயேசு சொன்ன வசனத்தின் ஆழங்களை புரிந்து கொண்டீர்களா?
இன்றைக்கு உலர்ந்து போன எலும்புகள் ஆவியானவரால் ஒன்று சேர்ந்து தேவனுக்காக ஒரு பெரிய சேனையாக எழும்பும் காலம். இதுவரையிலும் முழங்கால் முடங்காத மறைந்திருக்கிற, கிறிஸ்துவை தரித்து கொண்ட அநேகர் வெளியே வரப்போகிறார்கள்.கிறிஸ்துவுக்காக சாவு எங்களுக்கு ஆதாயம். மரணமே உன் கூர் எங்கே...பாதாளமே என் ஜெயம் எங்கே என்று சொல்வார்கள். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல...பெலத்திலே உண்டாயிருகிறது. கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் பெலனடைந்து கழுகுகளை போல செட்டைகளை அடித்து உயரே எழும்பி பறக்கும் காலம். உபத்திரவ காலத்தில் அதிகார பெலத்தினால் பொல்லாதவர்கள் உனக்கெதிராக தீவிரித்து வருகிறார்கள் நீயோ தேவனுடைய மனுஷனே உலக அதிகாரத்துக்கு மேலான அதிகாரமான பரிசுத்த ஆவியானவரின் பெலத்தை பெற்று கொள்ளும்படி கர்த்தருக்கு காத்திருந்து அவரது வல்லமையை தரித்துக்கொள். இதுவரையிலும் இல்லாத பின்மாரியின் அபிஷேக வல்லமை கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் மேல் ஊற்றப்பட போகிறது வரும் எழுப்புதலுக்காக நீ கிரயம் செலுத்து உன்னை ஆயத்தப்படுத்திக்கொள், உன் மூலமாக தேவன் செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும். அன்றைக்கு ஸ்தேவான் கல்லெறியப்பட்ட போது அவன் பரிசுத்த ஆவியில் நிறைந்து வானத்தை அண்ணாந்து பார்த்த போது தேவன் அவனுக்காக நான் இருக்கிறேன் என்று வானத்தை திறந்தார். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். மத்தேயு 10-28 என்று இயேசு சொன்னதை அன்றைய ஆதி அப்போஸ்தலர்கள் சரியாக புரிந்து கொண்டார்கள்.
எனவே உபத்திரவ காலத்தில் தேவன் உனக்காக வைத்திருக்கும் நித்திய மகிமைக்காக ஓடு.
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். எபேசியர் 6:10.
ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:13. ஆமென்.