top of page
கோபம் என்ற மாம்சத்தின் கிரியை
 
இன்றைக்கு ஊழியம் செய்பவர்களும் விசுவாசிகளும் கோபம் என்ற மாம்ச கிரியைக்கு அடிமை  யாயிருப்பது மிகவும் பரிதாபமானது.சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று வாய் கிழிய பிரசங்கிப்பவர்கள் பலர் கோபத்தின் ஆவியால் ஆளுகை செய்யப்பட்டிருக்கிறார்கள்.வீட்டில் மனைவியிடமும் பிள்ளைகளிடம் கோபத்தில்  சண்டை போட்டு கொண்டு வெளியில் சாந்த குணமுள்ளவவர்களை போல நடித்து கொண்டிருக்கிற பிரசங்கிகள் மற்றும் விசுவாசிகள் ஏராளம். இவர்கள் தங்கள் மாம்சத்தை சிலுவையில் அறையாதவர்கள்.
 
பெருமைக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்பது போல் கோபம் தேவனுக்கு விரோதமான பகை ஏனென்றால்? மனுஷனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே (யாக்1-20) என்று வேதம் சொல்கிறது, மேலும் கலாத்தியர் 6 ம் அதிகாரத்தில் பகைகள் விரோதங்கள் வைராக்கியங்கள் கோபங்கள் சண்டைகள் இவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று வேதம் ஆணித்தரமாக சொல்கிறது. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதக சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். நீயோ எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. தீத்து 2:8 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. தீத்து 3-2 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? யாக்கோபு 4-1 .
 
பிரியனவர்களே நம் இருதயத்தில் இருக்கும் கோபம் மற்றும் எரிச்சல் வாயின் வார்த்தைகளாக வெளியே வருகிறது இயேசு சொன்னப்படி நீங்கள் பேசும் வார்த்தைகள் தான் உங்களை தீட்டுபடுத்தும், மேலும் நீங்கள் கோபத்தில் பேசிய வீணான வார்த்தைகள் குறித்து நியாயதீர்ப்பின் நாளிலே கணக்கு கொடுக்க வேண்டும். எனவே நம்மை நாமே நிதானித்து அறிவோம். தேவனை துதிக்கும் வாயினாலே தேவனுடைய சாயலாய் உண்டாக்கப்பட்ட மனுஷனை சபிக்கலாமா?ஒரே ஊற்று கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?அதாவது ஒரே இருதயத்திலிருந்து தேவ அன்பும் கோபமும் வெளிப்பட முடியுமா?அப்படி வெளிப்பட்டால் அது மாயமாலமான அன்பு.(தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 1 யோவான் 3:15)
 
நம்முடைய இருதயத்தில் இருக்கும் கோபம் நமக்கும் ஆண்டவருக்கும் தான் தெரியும். பிரசங்கம் செய்கிற நானே ஆகாதவனாய் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கி கீழ்படுத்துகிறேன் என்று பவுல் சொன்னது போல கோபம் எரிச்சல் பகைகளை போன்ற மாம்ச கிரியைகளை அழித்து போடும்படிக்கு உபவாசத்தோடும் ஜெபத்தோடும் தேவ சமூகத்தில் தரித்திருப்போம். தேவனுடைய ராஜ்யத்துக்காக ஊழியம் செய்ய வந்து விட்டாலே அது சாத்தானின் இருளின் அதிகாரத்துக்கு விரோதமாக யுத்தம் செய்ய  ஆரம்பித்து விட்டீர்கள் என்பது தான்.எனவே சாத்தான் உங்களுக்கு எதிராக உங்கள் கோபத்தை தூண்டி உங்கள் நாவினால் பாவம் செய்யும்படி அநேகரை எழுப்புகிறான்.நீங்கள் கோபத்தினால் பிறரை காயப்படுத்தி தூசித்து துக்கப்படுத்தி கொண்டிருப்பீர்களானால் நீங்கள் தேவ சமூகத்தை விட்டு பிசாசின் ஆளுகைக்குள் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
 
அநேக ஊழியக்காரர்கள் கோபத்தினால் தவறான முடிவுகளை எடுத்து தேவன் தனக்கு கொடுத்த அழைப்பை இழந்திருக்கிறார்கள்.மோசே கோபத்தினால் கன்மலையை அடித்ததினால் கானான் தேசத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை. என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.சங்கீதம் 39-1உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் என்பதே இயேசு சொன்ன உபதேசம்.கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல(2யோவான் 9)
 
எனவே மனிதர்கள் உங்களை வார்த்தையினாலே தூசித்து காயப்படுத்தினார்களானால் நீங்கள் கிறிஸ்துவின் உபதேசத்தின் படி சகித்தே ஆக வேண்டும் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள் என்று இயேசு சொன்னாரே இது அல்லவா அவரது அடிச்சுவடு....அவர் காட்டிய மாதிரி. அவரால் அழைக்கப்பட்ட நீங்கள் அவரை அடித்து துன்புறுத்தி காயப்படுத்தின போது அவர் எல்லாவற்றையும் சகித்து பிதாவை நோக்கி அவர்களை மன்னியுங்கள் என்று சொன்ன அதே மாதிரியை தான் பின்பற்ற வேண்டும்.அதுவே தெய்வத்துவத்தின் மார்க்கம்.
 
ஏன் இன்றைக்கு மனிதர்கள் நம்மை வார்த்தையினால் காயப்படுத்தும் போது நாம் அவர்களை திரும்ப காயப்படுத்துகிறோம் தெரியுமா?கிறிஸ்து நமக்குள் இல்லை...நாம் கிறிஸ்துவுக்குள் இல்லை என்பதே உண்மை.கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவன் அல்ல. (பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 1 கொரிந்தியர் 3-3) என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல பூமியை பார்க்கிலும் வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,அப்படியே உங்கள் வழிகளை பார்க்கிலும் என் வழிகள் உயர்ந்திருக்கிறது. என்று தேவன் சொன்னார்.அன்றைக்கு இயேசு மனிதர்களின் உள்ளம் எப்படிபட்டது என்பதை தெளிவாக காட்டினார். (அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.  மத்தேயு 23-28 மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.லூக்கா 11-44)
 
ஒரு மனிதனின் கோபம் தூண்டப்படும் போது அவன் இருதயத்தில் உள்ள பகைகள் விரோதங்கள் வைராக்கியங்கள் போன்ற நாற்றங்கள் வாய் வழியாக தூஷண வார்த்தையாகவும்,  கெட்டவார்த்தையாகவும் வெளியே வருகிறது. இத்தகயவர்கள் தங்களை நிதானித்து அறியாமல் மனம் திரும்பாமல் தொடர்ந்து ஊழியத்தை செய்வது தான் பரிதாபம். இன்றைக்கு கோபத்தினால் கர்த்தருக்கு பிரியமில்லாத தூஷண வார்த்தைகளை பேசி பாவம் செய்து விடுகிறோம். இன்றைக்கு நம்மை நாமே நிதானித்து பார்ப்போம். நம்மிடம் உள்ள கோபத்தினால் எத்தனை பேரை காயப்படுத்தியிருக்கிறோம்.எத்தனை பேரை துக்கப்படுத்தியிருக்கிறோம். நம் வாயின் வார்த்தைகளினாலே பலரோடு சண்டை போட்டு இயேசுவின் நாமம் தூசிக்கும்படி நடந்திருக்கிறோம்.
 
எனவே நம்மை ஆராய்ந்து அறிவோம்.மனம் திரும்புவோம்.யாரிடம் சண்டை போட்டோமோ அவரிடம் மன்னிப்பு கேட்போம்.குறையை சரி செய்வோம். தேவனுக்கு முன்பாக கறையற்றவர்களாகவும் பிழையற்றவர்களாகவும் காணப்படுவோம்.  நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடம் கொடாமலும் இருங்கள். எபேசியர் 4:26,27.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. எபேசியர் 4:31 ஆமென்.
bottom of page