top of page

உன்னை வெறுமையாக்கு

 

கிறிஸ்து தன்னை முழுவதும் வெறுமையாக்கினபடியால் தேவன் அவர் மீது தன் ஆவியை அமரப்பண்ணினார். தங்கள் சுய நம்பிக்கையையும் சுய பெலத்தையும் சுய திருப்தியையும் வெறுமையாக்கினவர்கள் மீதே தேவன் தமது ஆவியை அளவில்லாமல் ஊற்றுகிறார். இன்றைக்கு வேதாகம கல்லூரியில் பட்டம் பெறுவதே ஆண்டவருக்கு ஊழியம் செய்ய தகுதி என்று பலர் நினைக்கிறார்கள்.  பலர் வேதாகம கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்று ஏதோ தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று தங்கள் பெயரை பெருமைபடுத்தி கொள்கிறார்கள்.

(ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. 1 கொரிந்தியர் 8-2).  இவர்கள் தங்கள் படித்த வேத அறிவை பயன்படுத்தி தேவனுக்கு ஊழியம் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் வேதாகம கல்லூரியில் படிக்காத,ஒன்றும் தெரியாத சாதாரணமானவர்களை தான் இயேசு ஊழியத்தில் வல்லமையாக பயன்படுத்தினார். அவர்கள் தான் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு புஸ்தகங்களை எழுதினார்கள் தங்களுக்கு முன்பாக டாக்டர் பட்டத்தை போட்டு கொண்டு நான் எல்லாவற்றையும் அறிந்தவன் என்று சொல்கிறவர்களை தேவன் ஒருகாலும் பயன்படுத்துவதில்லை  இவர்கள் வேதாகம கல்லூரியில் படிப்பதை நான் தவறாக சொல்லவில்லை. ஆனால் வேதாகம கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் இயேசுக்கு ஊழியம் செய்துவிடலாம் என்பது தவறானது.வெறும் வேத அறிவை வைத்து கொண்டு தேவனை அறிந்து கொள்ளாமல் பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லாமல் ஒருவரும் தேவ சித்தப்படி ஊழியம் செய்ய முடியாது. 

 

அன்றைக்கு இவர்களை போல வேதாகம கல்லூரியில் படித்து வேதாகமத்தை கற்று தேர்ந்த வேதபரகர்கள் பலர் இருந்தார்கள். இவர்களை இயேசு ஒருகாலும் ஊழியத்துக்கு அழைக்கவில்லை. இயேசுவின் சீஷர்கள் வேதாகம கல்லூரியின் ஆரம்ப பாடத்தை கற்று கொள்ள கூட தகுதியற்றவர்கள். இயேசுவோ தன் சீஷர்களுக்கு ஒரே ஒரு பாடத்தை தான் பிரதானமாக கற்று கொடுக்க விரும்பினார். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.(யோவான்-15-5)

 

இன்றைய பெரும்பாலானவார்கள் இயேசு கற்று கொடுக்க விரும்பிய பாடத்தை இதுவரை கற்று கொள்ள விரும்பவில்லை.ஒரு உண்மையான தேவ ஊழியனுக்குறிய தகுதி என்னவென்றால் அவன் தேவனையே முழுவதும் சார்ந்து ஊழியம் செய்வான்.இயேசு ஊழியம் செய்த போது என் சுயமாக எதையும் செய்யவில்லை என்றார். (நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார் என்றார். யோவான் 12:49)

 

இன்றைக்கு பிரசங்கம் பண்ண போகிறவர்கள் தங்கள் சுயபெலத்தினால் போய் தங்கள் பேச்சு திறமையினாலும் வேத அறிவினாலும் பேசி ஜனங்களை கவர்ந்து விடுகிறார்கள் ஆனால் தேவன் கிரியை செய்யாமல் பேசப்படும் பிரசங்கம் ஒரு மேடை பேச்சாளரை போல நயவசனிப்பாக தான் இருக்கும்.தேவன் கிரியை செய்யாமல் எந்த ஒரு ஆத்தும ஆதாயமும் நடக்காது.அதனால் தான் பவுல் என் பிரசங்கத்தை ஜனங்கள் கேட்கும்படி தேவன் என்னை பெலப்படுத்தினார் என்றான். (கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும்,என்னைப் பலப்படுத்தினார். 2 தீமோத்தேயு 4-17.

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்பட்டதாயிருந்தது. 1 கொரிந்தியர் 2-5)

இப்பொழுது புரிந்து கொண்டீர்களா??தேவனுடைய வேலையை சுயபெலத்தினால் ஒருகாலும் செய்யமுடியாது. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. யோவான் 7-18

 

மோசேயின் சுயம் உடைக்கப்பட்டு அவன் திறமைகள் எல்லாம் அழிந்து தேவனுடைய ஊழியத்தை செய்ய தகுதியுடையவனாக மாற 40 வருடங்கள் தேவைப்பட்டது காவலிலும் சாவிலும் உம்மை பின்பற்றி வருவேன் என்று இயேசுவிடம் சொன்ன பேதுரு ஒரு வேலைக்காரியிடம் வீழ்ந்து போனான்.சுய தகுதியும் சுய நம்பிக்கையும்,சுய பெருமையும் நொறுங்கி நம்மை ஒரு பொருட்டாக எண்ணாத இடத்தை அடையும் வரை தேவன் நமக்காக காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. இது தான் தேவனுக்காக ஊழியம் செய்ய தேவன் எதிர்பார்க்கும் தகுதி. ஆமென்

bottom of page