இப்போதாவது தேவனுடையஇரக்கத்தை பெறுங்கள்
இந்த கடைசி நாள்களிலாவது தேவனுடைய இரக்கத்தை பெறும்படியாக அவர் சமூகத்தில் நம்மை தாழ்த்துவோம். நமக்குள்ளே இருக்கும் அந்தரங்கமான பாவத்தை மறைத்து வெளியே பரிசுத்தவான்கள் மாதிரி மாயமாலம் பண்ணுவதை விட்டு விடுவோம். பாவத்தை அறிக்கை செய்து விட்டு விடுங்கள் அப்பொழுது இரக்கம் பெறுவீர்கள் என்று வசனம் நம்மை எச்சரிக்கிறது.
(தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள் 28-13)
இன்றைக்கு நம்முடைய பாவத்தையும் மீறுதல்களையும் அறிக்கை செய்கிறோம்.ஆனால் அவற்றை இன்னமும் விட்டு விட முடியவில்லை. மேலும் ஜனங்கள் தங்கள் உபவாசத்தையும் ஜெபத்தையும் நம்பியிருக்கிறார்களே தவிர தேவனை முழுமையாக நம்பவில்லை. ஜெபமும் உபவாசமும் மிகவும் முக்கியம் ஆனால் எல்லாவற்றிலும் தேவனை நமக்கு முன்பாக வைத்திருக்௧வில்லை. ஜெபத்தையும் உபவாசத்தையும் வெறும் சுய திருப்திக்காகவும் கடமைக்காகவும் செய்கிறோம்.புற மதத்தவர்கள் கூட நம்மை விட தங்கள் சரீரத்தை ஒடுக்கி அருமையாக உபவாசிக்கிறார்கள்.
இன்றைக்கு, நாங்கள் 40 நாள்கள் 21 நாள்கள் உபவாசம் இருக்கிறோம் என்று உலகத்துக்கு தங்களை காண்பிக்கிறார்கள். ஆனால் தங்கள் ஜீவிதத்தில் எந்த மாற்றமுமில்லை.தேவன் விரும்பும் மனத்தாழ்மையில்லை. பரிசுத்தமுள்ள,தேவ வசனத்துக்கு கீழ்படிந்து நடுங்குகிற சாட்சியுள்ள வாழ்க்கையை பார்த்து தான் பிசாசு பயப்படுவான்.வசனத்துக்கு கீழ்படியாமல் பொல்லாத வழிகளை விட்டு திரும்பாத மாயமாலமான உபவாசத்தை பார்த்து தேவன் ஒருகாலும் இரங்குவதில்லை. பொல்லாத வழிகளை விட்டு திரும்பி தேவனை நோக்கி கண்ணீரோடு ஜெபிப்பவர்களை தான் தேவன் காண்கிறார்.
இன்றைக்கு, மெய்யான சுத்திகரிப்பு நம் சிந்தனைகளிலும் செயல்களிலும் வரவில்லை. நம்முடைய பழைய மனிதனின் சுபாவம் இன்னும் மாறவில்லை.
நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள். ஏசாயா 1:15,16.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. 1 பேதுரு 3:12
ஊழியம் செய்கிற நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். சபை நம்முடைய வாழ்வாதாரத்துக்காக அல்ல.
நம்முடைய தேவைகள் சந்திக்கப்பட தேவனை நம்பாமல் நாம் மனிதர்களை நம்பினோம். சபையின் காணிக்கையை நம்பினோம்.நம்மை அழைத்த உண்மையுள்ள ஆண்டவரை நம்பவில்லை.சபை தேவனுக்குறியது. ஆத்துமாக்கள் தேவனுக்குரியவர்கள்.நாம் தேவனால் அழைக்கப்பட்ட வேலைக்காரர்கள். அதாவது அப்பிரயோஜனமான வேலைக்காரர்கள். பூமியையும் அதன் நிறைவையும் உடைய தேவன் தன்னால் அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள் அவரை மாத்திரம் சார்ந்து முழு இருதயத்தோடு அவரை விசுவாசிக்கும் போது அவர்களது தேவைகளை நிச்சயம் சந்திப்பார்.
கிறிஸ்துவே சபைக்கு தலையாயிருக்கிறார்.கிறிஸ்துவின் உபதேசத்தின் மேல் கட்டப்படாத சபையெல்லாம் சபை அல்ல. சத்தியத்துக்கு எதிராக மனிதர்களின் உபதேசத்தின் மேல் கட்டப்பட்ட சபையெல்லாம் மனிதர்களுடைய சபை. அந்த சபைகளுக்கு அதன் ஸ்தாபகர்கள் தான் தலையாயிருக்கிறார்கள். உங்கள் சபையில் யார் தலையாயிருக்கிறார்கள்??. எந்த உபதேசத்தின் மேல் உங்கள் சபை கட்டப்பட்டிருக்கிறது??. கிறிஸ்துவின் உபதேசத்தின் படி சபையை நடத்தாத ஊழியக்காரர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள். இவர்களை பற்றி இயேசு சொல்லும் போது அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள், குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். மத்தேயு 15-14.
பிரியமானவர்களே!! உங்களுக்கு இயேசு வேண்டுமா அல்லது உங்கள் ஸ்தாபனத்தை உருவாக்கிய ஸ்தாபகர் வேண்டுமா?அழிந்து போகிற அதாவது மனிதர்கள் உருவாக்கின கொள்கை வேண்டுமா?வானமும் பூமியும் அழிந்து போனாலும் அழியாத நித்திய ஜீவ வசனங்களை கொடுத்த சதாகாலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து வேண்டுமா??
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்; 2 யோவான் 1-9
தேவ ஜனமே சபையில் ஊழியக்காரனை மகிமை படுத்தியதற்காக மன்னிப்பு கேள்.சபையை உருவாக்கியவரை தேவனுக்கு மேலாக உயர்த்தியது தவறு.தனி மனித வணக்கம் சபையிலும் இருக்கிறது. ஊழியக்காரர்கள் ஜனங்களை தேவனுக்கு நேராக திருப்பாமல் தங்களுக்கு நேராகவும் தங்கள் ஸ்தாபனத்துக்கு நேராகவும் திருப்பினார்கள்.
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1 தீமோத்தேயு 1-12.
பிரியமான ஊழியக்காரர்களே!!!!!
இனி காலம் செல்லாது,… உங்களை உண்மையுள்ளவர்களென்று எண்ணி கிறிஸ்து உங்களை அழைத்திருப்பாரென்றால் நீங்கள் அவருக்கு மாத்திரம் உண்மையுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கும் போது அவர் கட்டளையிட்டதை சபையில் போதியுங்கள். அவர் செய்ய சொன்னதை சபையில் செயல்படுத்துங்கள். இரண்டு எஜமானனுக்கு அதாவது கிறிஸ்துவின் உபதேசத்துக்கு எதிரான மனிதன் உருவாக்கின கொள்கைகளை உடைய, நீங்கள் சார்ந்திருக்கும் ஸ்தாபனத்திற்கும் கிறிஸ்துவுக்கும் ஊழியம் செய்து விட முடியாது. உங்கள் ஸ்தாபன கொள்கைகளுக்கு ஒத்த வேஷம் தரித்து பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்ட வசனங்கள் அதாவது கட்டளைகள் தேவையில்லை என்று குறைத்து போதித்தால் உங்கள் பெயர் ஜீவ புஸ்தகத்திலிருந்து நீக்கப்படும்.
(ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளிப்படுத்தின விசேஷம் 22:19.)
என்னை தள்ளி என் வசனத்தை ஏற்று கொள்ளாதவனை நான் சொன்ன வசனமே அவனை கடைசி நாளில் நியாயம் தீர்க்கும் என்று இயேசு எச்சரித்ததை மறக்காதீர்கள்.
இப்பொழுதாவது அதிக ஆக்கினையை அடைவோமென்று அநேகர் போதகராகாதிருங்கள் என்ற வசனத்தின் எச்சரிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.
அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்ளுவார், நீ பொய்யனாவாய். நீதிமொழிகள் 30-6.
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 1 யோவான் 2-4.
இயேசு கிறிஸ்து கைக்கொள்ள சொன்ன கட்டளைகளை சபையில் போதிக்காமல் எத்தனை பேர் இடறலடைவதற்க்கு காரணமாக இருந்தோம்.
இயேசு சொன்ன கட்டளைகளை தேவையில்லை என்று சத்தியத்துக்கு விரோதமாக பொய் சொல்லி போதித்த உங்களை பொய்யர்கள் என்று தேவன் நியாயம் தீர்க்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.
பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலிலே பங்கடைவார்கள் என்று வெளி 21-8 ல் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலாத்தியர் 1-10.
இன்றைக்கு நாம் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துவதில்லையென்றால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிர்த்து நிற்க்கிறோம். ஜனங்களின் பாவத்தை கண்டித்து உணர்த்தாத பொது அவன் தன் துன்மார்கத்தில் மரிக்கும் போது அவன் இரத்த பழியை உங்களிடம் கேட்பேன் என்று தேவன் எச்சரிக்கிறார்.எனவே இந்த கடைசி நாள்களில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோம். நாம் எதை போதித்தோம்?, யாரை பிரியப்படுத்தி போதித்தோம்?, யாருக்கு ஊழியம் செய்தோம் ஊழியத்தில் தேவனை நம்பினோமா அல்லது காணிக்கை பணத்தை நம்பினோமா?
நாம் எங்கு தவறியிருக்கிறோம் என்பதை அறிந்து அதற்காக மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்போம்,மனம் திரும்புவோம். அவருடைய இரக்கத்துக்காகண்ணீரோடு அவர் சமூகத்தில் மன்றாடி ஜெபிப்போம். ஆமென்.