top of page
நமக்கொரு பாலகன் கொடுக்கப்பட்டார்
இன்றைக்கு கிறிஸ்து பிறந்த நாள் என்று ஒரு நாளை நியமித்து உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்து பிறப்பின் நாள் என்று ஒரு நாளை நியமித்து அதை நினைவு கூறுவதில் தவறில்லை. ஆனால் அவர் வந்த நோக்கம் நம் வாழ்க்கையில் நிறைவேறவில்லையென்றால் நாம் எல்லா மனிதர்களை விடவும் பரிதபிக்கபட்டவர்களாக இருப்போம். ஆனால் கிறிஸ்துமஸ் என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் குடித்து வெறித்து சத்தியத்துக்கு புறம்பாகவே கொண்டாடி தேவனை துக்கப்படுத்துகின்றனர். சில சபைகளில் கிறிஸ்து பிறப்பு என்று சொல்லி கொண்டு சினிமா கலை நிகழ்சிகளை போல ஆடலும் பாடலும் தான் நடத்துகின்றனர். ஆடலுக்கும் பாடலுக்கும் நேரம் செலவிட இது காலமல்ல. இன்றைய காலக்கட்டம் இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம். ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் அறிவிக்கப்படும் காலம். சபை சுத்திகரிக்கப்படும் காலம். பிசாசின் தந்திரங்களிலிருந்தும் உலக ஆசை இச்சைகளிலிருந்தும் நாம் நம்மை பாதுகாக்க பரிசுத்த ஆவியின் வல்லமையை பெற்று கொள்ளும் காலம். நம் தேவன் பரிசுத்தமானவர். நான் பரிசுத்தராயிருப்பது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். பரிசுத்தமாக வாழாதவர்கள் தேவனை தரிசிக்கமாட்டார்கள். ஆனால் இன்றைக்கு பரிசுத்தமில்லாத எந்த டாம்பீகமான ஆராதனைகளிலும் கொண்டாட்டங்களிலும் தேவன் இருப்பதில்லை.
அடுத்ததாக தேவாலயங்களின் வெளிப்புறங்களை அளவுக்கதிகமான பணத்தை செலவிட்டு அலங்கரித்து கொண்டிருக்கும் அநேக ஆலயங்களை பார்க்கிறோம். இன்றைக்கு அதே ஆலயத்தில் வறுமையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அது மாத்திரமல்ல நம்மை சுற்றி அநேகர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். ஆலயத்தை அளவுக்கு அதிகமாக பணத்தை செலவிட்டு அலங்கரிப்பதற்க்கு பதிலாக பிறருக்கு உதவுவதே தேவனை மகிமை படுத்துவதாகும். ஏழைகளுக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்ற இயேசு கிறிஸ்து சொன்ன சத்தியத்துக்கு புறம்பாக நீங்கள் எதை செய்தாலும் அது தேவனை மகிமைப்படுத்தாது.
இன்றைக்கு கிறிஸ்து எதற்க்காக பிறந்தார் எதற்க்கு இந்த உலகத்துக்கு வந்தார் என்பதை கூட அறியாமல் அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.கிறிஸ்து பிறந்தார் என்பதை விட நமக்கு ஒரு பாலகன் கொடுக்கப்பட்டார் என்ற காரியத்தில் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்போம்.கிறிஸ்து நம் பாவத்துக்கு கிரயமாக கொடுக்கப்பட்டார் என்ற காரியத்துக்கு நாம் கணக்கொப்புவிக்க வேண்டும், இன்றைக்கு கிறிஸ்து பிறந்த நோக்கம் நம் வாழ்வில் நிறைவேறாமல் இயேசு நமக்கு பெற்று தந்த விலையேற பெற்ற இரட்சிப்பையும் பாவமன்னிப்பையும் பெற்று கொள்ளாமல் கிறிஸ்து பிறப்பை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி கொண்டிருந்தால் நீங்கள் உங்களை ஏமாற்றி கொண்டிருக்கிறீர்கள்.
இயேசு கிறிஸ்து பிறந்தது உண்மை தான்.ஆனால் இன்று அவர் நியாயாதிபதியாய் வாசலண்டையில் நின்று கொண்டிருக்கிறார். அவரது முதலாம் வருகையை விட அவரது இரண்டாம் வருகை மிகவும் பயங்கரமாக இருக்கும்,அப்பொழுது அநேகர் மாயமாக மறைந்து போவார்கள். அதாவது எடுத்துக் கொள்ளப்படுவார்கள், எங்கு பார்த்தாலும் திகிலும் பயமும் அழுக்குரலும் காணப்படும்,எடுத்து கொள்ளப்படாத ஊழியக்காரர்கள் வெளியே வர வெட்கப்பட்டு தங்களை மறைத்து கொள்வார்கள்.
பிரியமானவர்களே உங்கள் சபையோ உங்கள் ஊழியக்காரனோ உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து உங்களை இரட்சிப்புக்குள்ளும் மற்றும் சகல சத்தியத்துக்குள் நடத்தாமல் ஏதோ ஒரு மனமகிழ் மன்றம் போல சபையை நடத்தினால் அவர்களை விட்டு வெளியேறுங்கள். கிறிஸ்தவனுக்கு மரணத்துக்கு பிறகு தான் மகிமையான வாழ்க்கை இருக்கிறது.பரலோகத்துக்கு தகுதி பெறுவது தான் உலக வாழ்க்கை. இந்த உலக வாழ்க்கையில் இயேசு எப்படி நடந்தாரோ எதை செய்ய சொன்னாரோ அதை செய்து நித்திய ஜீவனை பெற்று கொள்ளுங்கள். நானே வழி என்று சொன்ன இயேசு கிறிஸ்து நாம் எப்படி வாழ வேண்டும் என்ற மாதிரியை வைத்து விட்டு சென்றிருக்கிறார். (இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.1 பேதுரு 2-21
கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்த நோக்கத்தை அறியாமல் கிறிஸ்து பிறந்தார் என்று தாலாட்டு பாடி கொண்டு நீங்களும் தூங்கி விடாதீர்கள். புத்தியுள்ள கன்னிகைகளை போல ஜெபத்தோடு விழித்திருங்கள். கடைசி நாள்களில் இருக்கிறோம் என்று உணர்ந்து நீங்கள் ஆயத்தப்படுங்கள்.கடைசியாக கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்துக்கு வந்த நற்செய்தியை அறிவிப்பதே நமது நோக்கமாக இருக்கட்டும். பரலோகத்திலிருந்து வந்த தேவ தூதனே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை ஜனங்களுக்கு அறிவித்ததை பார்க்கலாம். எனவே இந்த நாள்களில் நாம் செய்யும் எந்த காரியங்களும் தேவனை மகிமைப்படுத்துவதில் இருக்கட்டும்.
கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 2தெசலோனிக்கேயர் 2-13)
bottom of page