தேவனுடைய ஆலோசனை எங்கே ???
ஆண்டவர் மோசேயிடம் ஆச்சரிப்பு கூடாரத்தை தான் காட்டிய மாதிரியின் படியே செய்யும் படி எச்சரிக்கிறார். (மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு. யாத்திராகமம் 25-40).
தாவீது சாலமோனிடம் (இப்போதும் எச்சரிக்கையாயிரு, பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார், நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான். 1 நாளாகமம் 28-10.)
மேலும் அடுத்த வசனங்களில் பரிசுத்தாவியானவர் கட்டளையிட்டப்படி ஆலயத்தை எப்படி கட்ட வேண்டும் என்பதை சாலமோனிடம் தாவீது சொல்வதை பார்க்கலாம். தேவன் காட்டின மாதிரியின் படி ஆலயத்தை கட்டின போது அங்கு தேவ மகிமை இறங்கினது. இப்படியாக பழைய ஏற்பாட்டு காலத்திலே தேவன் தேவ மனிதர்களுக்கு தன் ஆலோசனையின் படி ஆராதிக்கும் ஸ்தலத்தையும் பலிபீடத்தையும் உருவாக்க வேண்டும் என்கிறார். ஆனால் இன்றைக்கு ஊழியக்காரர்கள் தங்கள் சொந்த ஆலோசனையின் படியும் தன்னை சுற்றி இருப்பவர்களை பிரியப்படுத்தவும் ஜனங்களின் எண்ணிக்கைக்காகவும் தேவசித்தத்துக்கு மாறாக பல முடிவுகளை எடுக்கிறார்கள். தங்கள் சொந்த ஆலோசனைகளை செயல்படுத்திவிட்டு ஆவியானவர் செய்ய சொன்னார் என்று துணிகரமாக பேசுகிறார்கள். லூக்கா 12-47 ல் எஜமானின் சித்தத்தை செய்யாத ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தார். இயேவின் சீஷர்களும் ஆதி அப்போஸ்தலர்களும் பரிசுத்தாவியானவரின் ஆலோசனைகளின் படி செயல்பட்டார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நிரப்பபட்டவாராய் ஊழியம் செய்தார். இதற்காக அவர்கள் ஜெபத்திலும் உபவாசத்திலும் தரித்திருந்தார்கள். ஊழியத்தில் நம்முடைய சொந்த ஆவி ஏவுவதற்க்கும் பரிசுத்தாவியானவரின் ஆலோசனைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் சரியாக பகுத்தறிய வேண்டும்.
இன்றைக்கு அநேகர் ஊழியத்தில் தங்கள் மாம்சமும் மனசும் விரும்பினவைகளை செய்வதால் தேவ சித்தத்தை விட்டு விலகி தங்கள் சுயசித்தத்தையே செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களை பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு செவி கொடாமல் தங்களை சுற்றியிருக்கும் புகழ்பாடிகளின் ஆலோசனைகளுக்கு செவிகொடுத்து தேவ ஆலோசனையை புறக்கணிப்பதால் ஊழியத்தில் தேவமகிமையை இழந்து போகிறார்கள்.
இன்றைக்கு பிசாசானவன் ஊழியக்காரனுக்கு விரோதமாக புகழ்பாடிகளை வைத்து அவர்களை தேவராஜ்ஜியத்துக்கு பதிலாக பாபேல் கோபுரத்தையே கட்டும் படி செய்கிறான்.இவர்கள் தங்களை பிரபலப்படுத்தி இறுதியில் சிதறடிக்கப்படுகிறார்கள். எவன் மனித புகழ்சிக்கு விலகி ஓடி தேவ சமூகத்தில் காத்திருந்து தேவன் செய்ய சொல்லும் கட்டளைகளை பெற்றுக்கொண்டு அதை செயல்படுத்துகிறானோ அவனுடைய வாழ்விலும் ஊழியத்திலும் தேவ மகிமையும் தேவ வல்லமையும் வெளிப்படும். உங்கள் ஊழியப்பாதையிலும் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வழிகளை நீங்களே திட்டம் பண்ணாமல் அதை தேவனே திட்டம் செய்யுமாறு ஆவியானவரை அனுமதிப்பது மிகவும் மேன்மையானதாகும். (அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக் கொண்டிருக்கிறபோது; பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்போஸ்தலர் 13:2) அவர்கள் உடனே கீழ்ப்படிந்தார்கள்.( அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள். அப்போஸ்தலர் 13:4)ஊழியம் செய்து கொண்டிருந்தவர்களை அனுப்பியது பரிசுத்த ஆவியானவரே. அந்த பயணத்தின் போதும் அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசியின் மேலும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.எலிமா என்ற மந்திரவாதி ஆவியானவரின் வல்லமையை தடை செய்ய எண்ணி எதிர்த்து நின்றான்.பவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்று பார்த்து எல்லா கபடமும் எல்லா பொல்லாங்கும் நிறைந்தவனே பிசாசின் மகனே நீதிக்கெல்லாம் பகைஞனே கர்த்தருடைய செம்மையான வழிகளை புரட்டுவதில் ஓயமாட்டாயா?(அப் 13 9-10)உண்மையிலே பவுலின் மீது பரிசுத்தாவியானவர் வல்லமையாக இறங்கியிருந்தபடியால் அவன் மாயவித்தைகாரனை பார்த்து நீ குருடனாயிருப்பாய் என்றார். அது அப்படியே நடந்தது. கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. (அப் 13-49)இன்றைக்கு பெரும்பாலானவர்கள் பரிசுத்த ஆவியானவராலே நடத்தப்படுவதில்லை. அதனால் தான் அவர்கள் சபையில் நிறைய ஜனங்கள் இருந்தாலும் அவர்கள் செய்யும் காரியங்களில் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள்நிறைய ஜனங்கள் வந்த போதிலும் அவர்கள் உண்மையான ஆத்தும இரட்சிப்பை பெற்று கொள்ளாமல் கனி கொடுக்காத உலர்ந்து போன கொடிகளாய் அப்படியே கடந்து போகிறார்கள்.
இன்றைக்கு நாம் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து நடப்போமானால் நாம் எடுக்கும் எந்த முடிவும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையினால் எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும். தேவனே தனது தயவுள்ள சித்தத்தின் படி விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டு பண்ணி நம்மை செயல்பட வைக்கிறார். (ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
பிலிப்பியர் 2-13) நீங்கள் முழுவதுமாக பரிசுத்தாவியானவரால் நடத்தப்படும் போது நீங்கள் எடுக்கும் தீர்மானங்களும் அவருடைய சித்தத்தின் படியே இருக்கும். நீங்கள் நினைப்பதை ஆவியானவரும் சரி என்பார். ஏனென்றால் அது உங்களோடு இசைந்திருக்கும் பரிசுத்தாவியானவரின் ஆலோசனையாக தான் இருக்கும். இப்படிபட்டவர்கள் மாத்திரமே ஊழியத்தில் இயற்க்கைப்பாறபட்ட காரியங்களை செய்வார்கள். இவர்கள் செய்யும் ஊழியங்களில் தான் தேவமகிமை வெளிப்படும்.
அப் 15-29 ல் எருசலேமிலுள்ள சபையின் மூப்பர்கள் எழுதும் போது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாக கண்டது என்று எழுதுகிறார்கள்.இது தான் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து ஊழியம் செய்வது. அப்போஸ்தலர் அதிகாரத்தில் பவுல் உட்பட ஊழியம் செய்தவர்கள் அனைவருமே பரிசுத்த ஆவியானவரால் மாத்திரமே வழி நடத்தப்பட்டார்கள், அதனால் தான் ஆதி அப்போஸ்தலர்கள் உலகத்தை தலைகீழாக திருப்பினார்கள்.(தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி 4-20) அல்லேலூயா.