மாறாத கிருபை
- சகோ. எட்வின் கார்டர் -
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலையெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54:10.
1. கிருபையைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது.
2. யாருக்கு கிருபை கொடுக்கப்படுகிறது.
கிருபை என்பது என்ன?
ஐசுவரியவானாய் இருந்த நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக தரித்தரராய் மாறினார் இதைதான் கிருபை என்று சொல்லுகிறோம். [ சுய நலமற்ற அன்பு ] 2கொரி 8:9.
முன்னுரை:
தேவன் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டுமானாலும், நாம் தேவனுடைய பிள்ளைகளாய் ஜீவிக்க வேண்டுமானாலும் இயேசு கிறிஸ்துவின் கிருபை நமக்கு ரொம்ப முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். தேவனுடைய கிருபை இன்று நம்மத்தியில் இல்லாது இருக்குமானால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இடத்திலே ஜீவனோடு இருக்க முடியாது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவேதான் பரிசுத்த ஆவியின் மூலமாய் கர்த்தர் இப்படியாக எழுதுகிறார்.... 1கொரி 15:10 மற்றும் புலம்பல் 3:22 சொல்லுகிறது – நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே மேலும் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் மெய்யான இரட்சிப்புக்குள்ளாக கடந்து வர வேண்டுமானால் கர்த்தருடைய கிருபை மிகவும் அவசியம் என்று எபேசியர் 2:5 மற்றும் 2:8 நமக்கு வெளிப்படுத்துகிறது.
இத்தகைய கிருபையின் அவசியத்தை தேவ மனுஷனாகிய மோசே நன்றாக அறிந்திருந்திருந்தார் எப்படியென்றால் தேவனுடைய கிருபையினாலே சொர்க்கத்திலிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்.
ஆகவேதான் தம்முடைய ஜனங்களை அதாவது 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஜனங்களை ஒன்றுமில்லாத இடத்திலே செழிப்பாக நடத்த முடிந்தது. அதுமாத்திரமல்ல யாத்திராகமம் 33:12,13,16 ஐ வாசிக்கும் போது மோசே தேவ கிருபையின் மூலமாக தம்மையும் தன்னுடைய ஜனங்களையும் விசேஷித்தவர்களாக கர்த்தருடைய பார்வையிலும் மற்ற ஜனங்களுக்கு முன்பாகவும் மாற்றினார் என்று பார்க்கிறோம்.
கர்த்தரை பார்ப்பதற்கு பயந்து கொண்டிருந்த மோசே அதுமட்டுமல்லாமல் கர்த்தருடைய மகிமையைப் பார்த்த ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது என்பதையும் அறிந்திருந்த மோசே இப்பொழுது கர்த்தரிடத்தில் கேட்கிறார். கர்த்தாவே நான் உம்முடைய மகிமையைக் காண வேண்டும் இதற்கு காரணம், அதாவது இத்தகைய தைரியத்திற்குக் காரணம், மோசே கர்த்தருடைய கிருபையை அளவில்லாமல் பெற்றுக் கொண்டதே ஆகும் [ 1கொரி 4:15 ].
ஆனால் இன்றைய சபைகளின் நிலைமை என்னவாக இருக்கிறது. இன்று ஆண்டவரே ஆதி சபைகளில் இருந்த அதே வல்லமையை ஊற்றும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறோம்.
கர்த்தருடைய கிருபை நம்மிடத்தில் இருக்குமானால் நாம் நம்மை குறித்து மேன்மைப்பாராட்டாமல் கிறிஸ்துவை குறித்து மாத்திரமே மேன்மை பாராட்டுவோம். அதுமட்டுமல்லாமல் சபைகளிலும் சபையின் வெளியிலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற கிறிஸ்தவ சப்பாணிகளை எழுப்பி விட்டிருப்போம்.
ஒரு காரியத்தை மாத்திரம் மறந்து விடாதீர்கள், தேவனுடைய கிருபை இல்லையென்றால் நாம் புத்தியுள்ள சிற்பாசாரியைப் போல அஸ்திபாரம் போட முடியாது [ 1கொரி 3:10 ], மேலும் நாம் எல்லாவற்றிலும் சம்பூரணமுடையவர்களாய் சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாக மாற வேண்டுமானாலும் நமக்கு இந்த தேவ கிருபை அவசியம் என்று அப்.பவுல் 2கொரி 9:8 அ அழகாக எழுதி வைத்திருப்பதை நாம் வாசிக்க முடிகிறது.
இத்தகைய கிருபையைப் பெற்றுக் கொண்ட அப்.பவுல் எழுதுகிறார், கர்த்தருடைய கிருபையினாலே தாயின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அவருடைய ஊழியத்தை செய்யும்படியாக அழைக்கப்பட்டேன் [ கலா 1:15] மேலும் எபேசியர் 3:7ல், இந்த கிருபையின் மூலமாகத்தான் நான் கர்த்தருடைய முழு நேர ஊழியக்காரனாக மாறினேன் என்கிறார்.
யார் தேவ கிருபையப் பெற்றுக் கொள்கிறார்கள்?
1. கர்த்தரோடு சஞ்சரிக்கிறவர்களுக்கு [ உலகத்தை விட்டு வெளியேறும் போது ]
வேதம் சொல்லுகிறது, ஆதி 28:15ல், நான் உன்னோடே இருந்து நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
பாருங்கள் எப்பொழுது கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தை யாக்கோபோடு பகிர்ந்து கொள்கிறார். அவர் கர்த்தருடைய தயையைப் பெற்ற ஆசீர்வாதமான சந்ததியின் வித்தாகிய ஈசாக்கோடு இருந்த போது கர்த்தர் அவரோடு இடைப்படவேயில்லை. ஆனால் அவர் எப்பொழுது தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி தனிமையாக வனாந்தரத்தில் வந்தாரோ அந்த நாளில் இருந்து கர்த்தர் யாக்கோபோடு தொடர்பு கொள்ள தொடங்கினார்.
ஏன் தெரியுமா? யாக்கோபு இந்த உலகத்தோடு இருந்த போது அவன் கர்த்தருக்கென்று ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திக் கொடுக்கவில்லை. நம்முடைய வீட்டில் ஒருவர் வந்து நம்மோடு உணவு அருந்தி நம்மோடு கூட சமாதானமாக சஞ்சரிக்க வேண்டுமானால் நமக்கும் அவருக்கும் இடையில் ஒரு விசேஷித்த நட்பு இருக்க வேண்டும். அதேபோலத்தான் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு கூட பேச வேண்டுமானால் நமக்கும் இயேசுவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்க வேண்டும்.
இந்த யாக்கோபு லூஸைப் போல இருந்த தன்னுடைய இடத்தை அதாவது வனாந்தரத்தைப் போன்று இருந்த இடத்தை கர்த்தர் வாசம் செய்கிற பெத்தேலாக மாற்றிக் கொடுத்தான் [ ஆதி 28:19 ]. லூஸ் என்கிற இடம் வழியாக எத்தனை மனிதர்களோ பயணம் செய்து இருக்கிறார்கள். எத்தனையோ மனிதர்கள் தங்கி இருந்திருக்கலாம் ஆனால் ஒருவர் கூட அந்த ஸ்தலத்திலே கர்த்தர் இருப்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த யாகோபோ அந்த ஸ்தலத்தில் கர்த்தரை தரிசித்தான். இதற்குக் காரணம் தன்னுடைய வாழ்க்கையை கர்த்தர் தங்குகிற வாசஸ்தலமாக மாற்றினான்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே கர்த்தர் உங்களிடத்தில் நம்முடைய கிருபையை அளவில்லாமல் ஊற்ற வேண்டுமானால் இதோ மனுஷருடைய பிரவர்த்தியினாலும் உலகத்தின் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிற உன்னுடைய இருதயத்தை கர்த்தர் வாசம் செய்கிற ஜெப வீடாக அதாவது பெத்தேலாக மாற்ற வேண்டும். அப்பொழுது மாத்திரமே கர்த்தர் தருகிற நன்மையை அநுபவிக்கிறவர்களாய் மாற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
2. நியாயப்பிரமாணமாகிய தேவனுடைய வார்த்தையை சுமக்கும் போது [ யோசுவா 1:5,8 ].
கர்த்தர் யோசுவாவைப் பார்த்து இப்படியாக சொல்லுகிறார் நான் மோசேக்குக் காண்பித்த என்னுடைய கிருபையை உனக்கும் தர வேண்டுமானால் நீ என்னுடைய வார்த்தையை எப்பொழுதும் சுமந்து செல்கிறவனாய் மாற வேண்டும். ஏன் தெரியுமா?.
வேதம் சொல்லுகிறது, ஒருவன் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவா அது உங்களுக்குச் செய்யப்படும் – யோவான் 15:7. அன்று இஸ்ரவேல் ஜனங்கள் பயணம் செய்த இடத்திற்கெல்லாம் அவர்கள் உடன்படிக்கை பெட்டியை சுமந்து சென்றனர் ஏன் தெரியுமா? அந்த பெட்டிற்குள்தான் தேவ மகிமையைக் கீழே கொண்டு வருகிற நியாயப்பிரமாண வார்த்தைகள் இருந்தது. அந்த பெட்டிற்குள் தான் தங்களுக்கு வெற்றியை கொடுக்கிற நியாயப்பிரமாண வார்த்தைகள் இருந்தது. அந்த பெட்டிற்குள் தான் தங்களுடைய வாழ்க்கையை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிற கர்த்தருடைய வார்த்தை இருந்தது.
அந்த பெட்டிற்குள்தான் தங்களுடைய வாழ்க்கையை நித்திய ஜீவன் வரைக்கும் அழைத்துச் செல்கிற கர்த்தருடைய மகத்தான அழியாத வார்த்தைகள் இருந்தது. அந்த பெட்டிற்குள் தான் தங்களுடைய அப்பமாகிய வாழ்க்கையும் தங்களுடைய நீதியாகிய கோலையும் பாதுகாக்கிற கர்த்தருடைய வார்த்தை இருந்தது. ஆகவேதான் அவர்கள் இந்த பெட்டியை சுமந்தார்கள். அதினால் தேவ கிருபையும் அவர்களோடு கூட பயணம் செய்தது.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே இன்று கர்த்தர் உங்களை தம்முடைய உடன்படிக்கைப் பெட்டியாக மாற்றியிருக்கிறார் இந்த பெட்டிற்குள் இருக்கிற கர்த்தருடைய வஸ்துக்கள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமானால் தேவ கிருபை நமக்கு ரொம்ப அவசியமாக இருக்கிறது. இந்த தேவ கிருபை வேண்டுமானால் நமக்கு கர்த்தருடைய வார்த்தையாகிய இந்த சத்தியம் தேவைப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம் – சங்கீதம் 119:160. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கிறது – சங்கீதம் 85:10 [முப].
3. கர்த்தருடைய முகத்தை தேடும் போது
வேதம் சொல்லுகிறது, என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே என்று இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.. உமது முகத்தை எனக்கு மறையாதேயும் நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப் போடாதேயும் நீரே எனக்குச் சகாயர் என் இரட்சிப்பின் தேவனே என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். சங்கீதம் 27:8,9.
இந்த வசனத்தில் சங்கீதக்காரனாகிய தாவீது எதை வெளிப்படுத்துகிறார் என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முகத்தைத் தேடும் போது மாத்திரமே நமக்கு மெய்யான ஆறுதலும் சமாதானமும் உண்டாகிறது. அதுமாத்திரமல்ல எப்படிப்பட்ட சந்தோஷத்தை அவர் தருகிறார் என்றால்?! வேதம் சொல்லுகிறது, கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணும். அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன் கத்தாவே நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப் பண்ணுகிறீர். சங்கீதம் 4:6,7.8. எப்பொழுதெல்லாம் நாம் அவருடைய முகத்தை நோக்கி பார்க்கிறோமோ அப்பொழுதெல்லாம் கர்த்தருடைய கிருபை நம்மை இந்த வசனங்களில் சொல்லப்பட்டது போல பலவிதமான ஆறுதலினால் நம்மை சந்திக்கிறது. என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். இத்தகைய இரகசியத்தை சங்கீதக்காரன் எப்படி தெரிந்து கொண்டார். தன்னுடைய அநுபவத்தின் மூலமாகவே என்று நாம் வேதத்தைப் படிக்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த தாவீது மூலமாய் அனேகர் பலவிதமான நன்மைகளைப் பெற்றுக் கொண்டதை நாம் பார்க்க முடிகிறது. இதோ கோலியாத்தைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள் இஸ்ரவேல் ஜனங்கள் மற்றும் சவுல் இராஜாவும். எப்படி நாம் தப்பித்துக் கொள்வோம் என்கிற பயத்தோடு இருந்த போது தாவீது சென்று அவர்களை கோலியாத்தின் கைக்கு தப்புவித்தான் என்று பார்க்கிறோம்.
இதோ தாவீதின் கையிலிருந்து நன்மையைப் பெற்றுக் கொண்ட சவுலின் முகத்திலோ தாவீது பொறாமை என்கிற குணநலத்தைப் பார்த்தான்.
அடுத்ததாக தான் அதிகமாக நேசித்த தன்னுடைய மகன் அப்சலோமின் முகத்திலிருந்து அன்பு வெளிப்படும் என்று காத்திருந்த தாவீதுக்கு அவனுடைய முகம் வஞ்சனையைக் காண்பித்தது. இப்படியாக இவர்களுடைய கையிலிருந்து தப்பி ஓடி பெலிஸ்தியரின் தேசத்திற்கு போய் தஞ்சம் அடைந்து கொண்டார்.
இப்படியாக அந்த தேசத்தில் இருந்து கொண்டு அந்த தேசத்தின் ராஜாவாகிய ஆகீஸ்ஸிற்கு பலவிதங்களில் உதவியாக இருந்தார். ஆனால் கடைசியில் என்ன நடந்தது. தன்னுடைய ஜனங்களின் பேச்சைக் கேட்டு கொண்டு இவ்வளவு நாட்கள் தனக்கு உதவியாய் இருந்த தாவீதுக்கு தன்னுடைய நன்றியில்லாத முகத்தை காண்பித்தான் இதனால் தாவீது ஒரு காரியத்தை புரிந்து கொண்டான். அதுஎன்னவென்றால் நிச்சயமாக மனுஷருடைய முகத்தில் எந்த கிருபையையும் பார்க்க முடியாது. கிருபையைப் பார்க்க வேண்டுமானால் தான் கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பார்க்க வேண்டும். என்பதை நன்றாக புரிந்து கொண்டார்.
4. நீதிமானும் உத்தமனுமாயிருக்கும் போது
வேதம் சொல்லுகிறது, நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. ஆதி 6:8.
கர்த்தருடைய கண்களில் அன்றைக்கு வாழ்ந்து கொண்டிருந்த பாவமான ஜனங்களின் மத்தியில் நோவாவுக்கு மாத்திரம் கிருபைக் கிடைக்க காரணம் என்னவென்று பார்ப்பீர்களானால் வேதம் சொல்லுகிறது, நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஆதி 6:9.
பாருங்கள் நோவா அவர்கள் வாழ்ந்த காலத்தில் இன்றைக்கு நாம் கர்த்தரைக் குறித்து அறிவதற்கு கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைப் போல அன்றைய தினம் காணப்படவில்லை, ஆனால் அப்படிப்பட்ட சூழ் நிலையிலும் நோவா உலகத்தின் இன்பங்களை மற்ற ஜனங்களைப் போல அனுபவிக்கவோ அல்லது உ;லகத்தை திருப்திப்படுத்தவோ விரும்பாமல் கர்த்தருக்குப் பிரியமானவராக வாழ்ந்தார் என்று பார்க்கிறோம்.
அதாவது தன்னை உலகத்தின் பாவத்திலிருந்து விலக்கிக் காத்துக் கொண்டார் என்று பார்க்கிறோம். இதற்குக் காரணம் அவர் தன்னுடைய சந்தோஷத்தைப் பார்க்கிலும் கர்த்தருடைய சந்தோஷத்தையே அதிக மேன்மையாக கருதினார்.
எத்தனை விதமான பரிகாச வார்த்தைகளை அவர் அனுபவித்திருக்கக் கூடும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பலர் அவரை முட்டாள் என்று கேலி செய்திருப்பார்கள் சிலர் அவரை பையத்தியக்காரர் என்று ஏளனம் செய்திருப்பார்கள். ஆனால் இவருடைய செவிகளோ கர்த்தருடைய வார்த்தைக்கு மாத்திரமே திறந்து இருந்ததை நாம் ஆவியில் உணர முடிகிறது. அதுமாத்திரமல்லாமல் மழையைப் பார்த்திராத நோவா கர்த்தர் மழையை வருஷிக்கப் பண்ணுவேன் என்று சொன்ன போது அதை விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டார் என்று பார்க்கிறோம்.
இதனால் கர்த்தருடைய கண்களில் மகா பெரிய கிருபையைப் பெற்றுக் கொண்டார் என்று பார்க்கிறோம். எப்படியென்றால் அந்த கொடூரமான அழிவிலிருந்து தன்னை மாத்திரமல்லாமல் தன்னுடைய உத்தமத்தின் மூலமாக தன்னுடைய குடும்பத்தையும் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படியாக கர்த்தருடைய கிருபை இவர்களுக்கு இரட்சிப்பின் பேழையை கொடுத்தது என்று பார்க்கிறோம். ஆனல் கர்த்தருடைய கிருபையைப் போக்கடித்த மற்றவர்களோ கர்த்தருடைய கோபத்தினால் அழிந்து போனார்கள் என்று பார்க்கிறோம்.
எனக்குப் பிரியமான கர்த்தருடைய பிள்ளைகளே கிருபையை வீணடிக்காமல் நமக்கு அருளப்பட்ட இந்த கிருபையைப் பயன்படுத்திக் கொண்டு இரட்சிப்பை கடைசி வரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் முதலாவது நாம் இந்த பாவ உலகத்திலிருந்து வெளியேறி உத்தமமாய் ஜீவிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
5. ஜெபிக்கும்போது
மோசே என்கிற தேவ மனுஷனுக்குத் தெரியும் தான் கர்த்தருடைய ஊழியத்தை ஒருபோதும் அவருடைய உதவி இல்லாமல் செய்ய முடியாது என்பதையும் பரிசுத்தமான கர்த்தரை தன்னுடைய முயற்சியினால் நிச்சயமாக திருப்திப்படுத்த முடியாது என்பதையும் நன்றாக அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்கிறார். எதற்காகவென்றால் பின்வரும் வசனங்களை வாசிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
வேதம் சொல்லுகிறது, அப்பொழுது அவர் அவரை நோக்கி உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால் எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டு போகாதிரும். எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களில் கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும் நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின் மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும் நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நீ சொன்ன இந்த வார்த்தையின் படியே செய்வேன் என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது உன்னைப் பேர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.யாத்திராகமம் 33:15,16,17.
இதோ கர்த்தருடைய கண்களில், மோசே தன்னுடைய ஜெப வாழ்க்கையின் மூலமாக அதிகமான கிருபையைப் பெற்றுக் கொண்டார். இந்த கிருபையினால் என்ன பிரயோஜனம் என்று பார்ப்பீர்களானால் மோசேக்கு பதிலாக எல்லா இடத்திலும் கர்த்தரே அவருக்காகவும் அவருடைய ஜனங்களுக்காகவும் யுத்தம் பண்ணினார் என்று பார்க்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் கர்த்தர் தம்முடைய சாயலை எந்த ஒரு மனுஷனுக்கும் அந்த நாட்களில் காண்பித்ததில்லை. ஆனால் இந்த தேவ மனுஷனோ கர்த்தருடைய சாயலைக் கண்டு மகிழ்ந்தான் என்று பார்க்கிறோம். மேலும் கர்த்தரால் என்னுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்று சாட்சி பகரப்பட்டார் என்று வேதத்தை நாம் வாசிக்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு எல்லாம் காரணம் மோசே கர்த்தருடைய கிருபையின் இரகசியத்தை நன்றாக அறிந்து அதை தன்னுடைய வாழ்க்கையில் முற்றிலுமாக பெற்றிருந்தார். ஆகவேதான் அவரால் கடைசி மூச்சு இருக்கும் வரை எந்த பெலத்தோடு தன்னுடைய ஊழியத்தை தொடங்கினாரோ அதே பெலத்தோடு முடிக்க முடிந்தது என்று பார்க்கிறோம்.
எனவே இப்படிப்பட்ட மகத்தான கிருபையை பெற்றுக் கொள்ளும்படியாக நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டும்.
6. தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்
வேதம் சொல்லுகிறது, தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் – நீதி 3:34 [பிப]. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகவும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத நமக்கு எட்டாத உயரத்தில் இருக்கிற அவரே, இந்த உலகத்தில் தாம் படைத்தவைகளையெல்லாம் பார்க்கும்படியாக தம்மைத் தாழ்த்தி இறங்கி வருகிறார் என்று சங்கீதம் 113:6 மற்றும் சங்கீதம் 138:6 நமக்கு அழகாக விளக்குகிறது.
இப்படிப்பட்ட மகத்தான பரிசுத்தமான கர்த்தரே இவ்வளவுக்கதிகமாக தம்மைத் தாழ்த்தும் போது நாசியில் சுவாசமில்லாத நாம் நம்மை எவ்வளவுக்கதிகமாக கர்த்தருக்கு முன்பாக தாழ்த்த வேண்டும். இன்று அனேக கிறிஸ்தவர்களும், ஊழியக்காரர்களும் விழுந்து போவதற்குக் காரணம் அவர்களிடத்தில் காணப்படுகிற மேட்டிமையான சிந்தை ஆகும்.
வேதம் சொல்லுகிறது, அழிவுக்கு முன்னானது அகந்தை விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. நீதி 16:18. அதுமட்டுமல்லாமல் யாரெல்லாம் பெருமையோடு வாழ்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் என்று 1பேதுரு 5:5ல் நாம் வாசிக்க முடிகிறது.
பாருங்கள் பரிசேயன் மற்றும் ஆயக்காரன் இரண்டு பேரும் ஜெபம் செய்வதற்காக ஆலயம் கடந்து செல்லுகிறார்கள். இந்த பரிசேயன் ஆலயத்திற்குள்ளாக சென்று அதாவது தான் மட்டும் ஆலயத்திற்கு செல்ல தகுதியற்றவன் என்பது போலவும். அதுமட்டுமல்லாமல் அவனுடைய ஜெபம் எப்படி கர்த்தரிடத்திற்கு கொண்டுப் போகப்படுகிறது என்று பாருங்கள் அவன், நான் ஒழுங்காக ஆலயத்திற்கு செல்கிறேன் மூன்று வேளை ஜெபிக்கிறேன், உபவாசம் செய்கிறேன், தசமபாகம் கொடுக்கிறேன். இத்தோடு அவன் தன் ஜெபத்தை நிறுத்தி இருக்கலாம், ஆனால் அவன் மேலும் ஜெபிக்கிறான் நாம் இந்த ஆயக்காரனைப் போல அல்லாமல். இந்த இடத்தில் அவனுடைய பெருமையையும் அகந்த குணத்தையும் பார்க்க முடிகிறது. இதனால் கர்த்தருடைய கிருபையை இழந்து போனான் என்று பார்க்கிறோம்.
ஆனால் இந்த ஆயக்காரனோ தன்னுடைய கண்களை கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பார்ப்பதற்கே தகுதியற்றவனாய் தன்னைக் காண்பித்து பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும் என்று ஜெபித்தான் இதனால் கர்த்தருடைய அளவில்லாத கிருபையை பெற்றவனாய் சந்தோஷமாய் கடந்து சென்றான் என்று பார்க்கிறோம்.[ லூக்கா 18:9-14 ].
7. கர்த்தரைக் குறித்து சாட்சிக் கொடுக்கும் போது
வேதம் சொல்லுகிறது, கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிக் கொடுத்தார்கள் அவர்களெல்லார் மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது.. அப்போஸ்தலர் 4:33. ஒரு மனுஷனைக் குறித்து நாம் உலகத்தில் எல்லா ஜனங்களின் முன்பாக பெருமையாக பேசும் போது அவன் அளவில்லாமல் ஆனந்தம் அடைகிறான். அதுமட்டுமல்லாமல் தம்மைக் குறித்து யாரெல்லாம் பெருமையாக மற்றும் புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அவன் விலையுயர்ந்த பரிசுகளை வாங்கிக் கொடுப்பதை நாம் பலவிதமான சூழ்நிலைகளில் பார்க்க முடிகிறது.
இதேபோலத்தான் நம்முடைய தகப்பனும் காணப்படுகிறார் இதோ தம்முடைய நாமத்தை பிசாசுக்கு முன்பாக, தம்முடைய ஜனங்கள் உயர்த்தும் போது மற்றும் யாருடைய வாழ்க்கையெல்லாம் கர்த்தருக்காக சாட்சியுள்ளதாக காணப்படுகிறதோ அதைக் குறித்து கர்த்தர் மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைகிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதன் விளைவாக அதாவது நம்முடைய சாட்சியின் மூலம் ஆனந்தத்திற்குள்ளாக சென்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தருகிற பரிசுதான் விலைமதிக்க முடியாத அவருடைய கிருபையே என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று அனேகருடைய வாழ்க்கையில் இந்த மகத்தான கிருபை இல்லாததின் நிமித்தமே அவர்கள் படுகிற வேதனையில் ஆறுதலை காணமுடியாமல் போய் விடுகிறது. சிலர் கர்த்தர் நிமித்தம் சோதனை வரும் போது தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பின்மாற்றத்திற்குள்ளாக சென்று விடுவதை நாம் இன்றைய நாட்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.
நாம் எப்பொழுதெல்லாம் கர்த்தருக்கு பிரியமாய் வாழுகிறோமோ அப்பொழுதெல்லாம் கர்த்தர் தம்முடைய கிருபையை அளவில்லாமல் நம்மேல் சொரிந்து கொண்டே இருப்பார் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் வருகிற நாட்களில் கர்த்தருக்காக சாட்சியாக நிற்க வேண்டும். அப்படி சாட்சியாக வாழ வேண்டுமானால் நமக்கு பரிசுத்த ஆவியானவரின் பலம் அதிகமாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே கர்த்தருடைய கிருபை நமக்கு கிடைக்கவில்லை என்றால் நாம் நிச்சயமாக நித்திய ஜீவனுக்குள்ளாக பிரவேசிக்கும் சிலாக்கியத்தை இழந்து விடுவோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவரையும் இந்த கிருபை என்கிற வார்த்தையின் மூலம் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!