top of page

சபையில் போர் செய்கிற இச்சைகள்

 

 ( உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?யாக்கோபு 4-1)


நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒரவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கலாத்தியர் 5 -15,   இன்றைக்கு சபைகளில் ஆவிக்குறிய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வதற்கு பதில் பதவியையும் பொருளையும் அபகரித்து கொள்வதற்காக எதையும் செய்ய ஜனங்கள் துணிந்து விட்டார்கள். நான் என்ற சுயத்தை சிலுவையில் அறையாத இவர்கள் நான் பெரியவனா நீ பெரியவனா என்பதற்க்காக போராடுகிறார்கள்சீஷர்களிடம் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற வாக்குவாதம் வந்த போது இயேசு கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவி தாழ்மையாக இருங்கள் என்பதை காண்பித்தார்.இன்றைக்கு இயேசு விட்டு சென்ற அடிசுவட்டை ஊழியக்காரர்களும் மூப்பர்களும் பின்பற்றுவதில்லை. பிரச்சனை என்று வந்து விட்டால் ஒரு கை பார்த்து விடுவோம் என்று Court வரைக்கும் போய் விடுகிறார்கள்,தங்களை உயர்த்தி கொள்ளுவதற்க்காக பெரியவனாகும் படி ஒருவருக்கொருவர் யுத்தம் பண்ணி அநேகருக்கு இடறலுண்டாக்கும்  இவர்கள் நித்திய ஜீவனுக்கு பிரவேசிப்பதில்லை. ஏனென்றால் இந்த உலகில் இயேசுவின் நாமம் தூசிக்கபடும் படி பதவியையும் பணத்தையும் இச்சித்து தேவாலயத்தை கள்ளர் குகையாக்கினார்கள். சபையில் அரசியல் பண்ணும் இவர்கள் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் சாபத்தை குவித்து வைக்கிறார்கள். (சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். 


ரோமர் 2:8 - இன்றைக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கு எதிராக சாத்தான் வைத்திருக்கும் கண்ணி பணம் பதவி என்கிற புகழ்ச்சி மற்றும் பெண். இதில் ஏதாவது ஒன்றில் இவர்களை வீழ்ச்சியடைய செய்கிறான். நீ 100 ரூபாய் காணிக்கை கொடுக்கும் போது தேவன் உன்னை பல மடங்கு ஆசீர்வதிக்கும் போது ஆலயத்திலிருந்து பல ஆயிரம் பணத்தையோ அல்லது சபையின் நன்மைகளையோ  நீ அபகரிக்கும் போது நீ சபிக்கபட்டவனாய் ஆகிவிடுவாய், அதன் மூலம் வருகிற சாபங்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும். இன்றைக்கு தங்களை மகிமைபடுத்தும் படி பிஷப் ஆகும் படிக்கு ஊழியக்காரர்கள் அரசியல் பண்ணி சபையை தீட்டு படுத்துகிறார்கள். ஆனால் சந்திப்பின் நாளிலே தேவன் இவர்களை பார்த்து உங்களை எனக்கு தெரியாது என்பார்.ஆனால் சபையில் உள்ள சாதாரண விசுவாசி பரலோக ராஜ்ஜியத்துக்குள் பிரவேசித்துவிடுவான்.இயேசுவிடம் ராஜ்ஜியத்தின் மகிமையெல்லாம் காட்டி என்னை பணிந்து கொள்.இவையெல்லாம் உனக்கு தருகிறேன் என்று சாத்தான் சொன்ன போது தேவன் ஒருவரையே பணிந்து கொள் என்று எழுதியிருகிறதே என்பதை சொல்லி பிதாவை மகிமைபடுத்தினார்.ஆனால் தங்கள் மகிமைக்காகவும் பதவிக்காகவும் இன்றைக்கு ஒருவருக்கொருவர் யுத்தம் பண்ணி கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் வெளியே போய் இயேசு உங்களுக்கு சமாதானம் தருவார் என்று எப்படி சுவிசேசம் அறிவிக்க முடியும்.


எபே 5-24 ல் சபையானது கிறிஸ்துவுக்கு தான் கீழ்படிய வேண்டும், பல சபைகளில் ஊழியக்காரர்கள் நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று இருமாப்பாய் ஆளுகிறார்கள்.அடுத்ததாக சபைகளை ஊழியக்காரர்களும் மூப்பர்களும் தேவ சித்தத்திற்கு மாறாக பல காரியங்களில் சுய சித்தத்தை நிறைவேற்றுவதால் பிரச்சனைகள் வருகிறது. இந்த கடைசிகாலத்தில் தேவ திட்டத்திற்கு விரோதமாக பாதாளத்தின் வல்லமைகள் தீவிரித்து வருகிறது. அதிகாரங்களும் இருளின் வல்லமைகளும் சபைகளுக்கு விரோதமாக எழும்புகின்றன. சபைகள் ஒரு மனப்பட்டு ஜெபிக்கும் முக்கியமான கால கட்டம். ஆனால் ஜெபிக்க முடியாதபடிக்கு  சபைகளில் பிரிவினைகள்,போராட்டங்கள்.மாற்கு 3-24,25 ல் ஒரு வீடோ ராஜ்ஜியமோ தனக்கு தானே விரோதமாக பிரிந்திருந்தால் அது பாழாய் போகும் என்று இயேசு சொன்னார். (பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?


1 கொரிந்தியர் 3-3 -  தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று வேதம் சொல்கிறது. பிசாசுக்கு கீழ்படிகிறவர்கள் எப்படி பிசாசுக்கு எதிராக யுத்தம் பண்ணுவார்கள். சபையில் ஊழியம் செய்கிறவார்கள் உதவிகாரர்கள் சண்டைகாரர்களாகவும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவர்களாகவும், பண ஆசை இல்லாதவர்களாகவும் ஒரே மனைவியையுடைய புருஷனாகவும் அதாவது பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இன்றைக்கு சபையில் நடைபெறும் சண்டைகளுக்கு காரணம் தகுதியில்லாதவர்கள் சபையில் மூப்பர்களாகவும் உதவிக்காரர்களாகவும் நியமிக்கபடுவதேயாகும். உன்னை போல பிறனை நேசி என்ற வேதாகமம் முழுவதும் தொகையாய் அடங்கியிருக்கற கட்டளையை கைக்கொள்ளாவிட்டால் நீங்கள் மாயமாலமானவர்கள். காண்கின்ற சகோதரனிடம் அன்பு கூறாதவன் காணாத தேவனிடம் எப்படி அன்பு கூறுவான். ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் இருளிலே இருக்கிறான்.  

 

இன்றைக்கு ஊழியம் செய்கிறவர்கள் மற்றும் சபையில்  பொறுப்பில் இருப்பவர்கள் ஜெபிப்பதேயில்லை. அதனால் அவர்கள் தேவ பெலனற்றவர்களாகவே இருக்கின்றனர். நீங்கள் மாம்சத்துக்குறியவர்களாக இருக்கிறபடியால் உங்களுக்கு பெலனில்லை என்று  (1 கொரி 3-2)ல் பவுல் எழுதுகிறார்.ஊழியம் என்பது பணிக்களம் அல்ல அது ஒரு யுத்தகளம்.சாத்தானோடும் அவன் சேனைகளோடும் யுத்தம் பண்ண வேண்டிய காலம். சர்வாயுதவர்கத்தை தரித்து கொள்ள வேண்டிய நேரம், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காணிக்கை பணத்திற்காகவும் சபை பதவிக்காகவும் சண்டை போட்டு கொண்டிருப்பீர்களென்றால் நீங்கள் இச்சிக்கிற காணிக்கைகளையும் பதவிகளையும்  தேவன் தேசத்தின் அதிகாரத்துக்கு ஒப்பு கொடுப்பார்,தேவ சபையை நீங்கள் பாழாக்கினால் உன் வீடு உனக்கு பாழாக்கி விடப்படும்.

 

தேவ சபையில் அநியாயம் செய்த அநேகருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் அதரிசனமான சாபங்கள், தேவ சமூகத்தில் பயத்தோடும் நடுக்கத்தோடும் ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை செய்யுங்கள். ஊழியம் செய்ய தகுதியில்லையென்றால் தயவு செய்து விலகி விடுங்கள். உங்க சுய லாபத்துக்காக சபையில் பதவிகளை வகிக்காதீர்கள். நீங்கள் ஒருவரிலோருவம் அன்பாயிருந்தால் என் சீஷார்கள் என்று அறிந்து கொள்வார்கள் என்று இயேசு சொன்னார். அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்கிறவர்கள் அவர் நடந்த படி தானும் நடக்க வேண்டும்(1யோவா 2-6) என்று வேதம் சொல்கிறது.

 

எனவே இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறவர்களாய் அவருக்கு ஊழியம் செய்ய நம்மை ஒப்பு கொடுப்போம்.நீங்கள் சபையில் எந்த பொறுப்பில் இருந்தாலும் தேவ கட்டளைகளுக்கு கீழ்படிந்து முதலாவாது உங்களை முன்மாதிரியாக நிறுத்துங்கள்.

 

கிறிஸ்துவே சபைக்கு தலையாயிருக்கிறார். எனவே தேவ சமூகத்தில் காத்திருந்து அவர் சித்தத்தை சபையில் நிறைவேற்றுங்கள்.தேவ சித்தத்துக்கு மாறாக ஊழியம் செய்து நரகத்துக்கு போவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நல்லது.

 


(நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,  மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,  சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். 
எபேசியர் 4:1-3) ஆமென்.

bottom of page