தேவனை அறிந்தவன் எங்கே?!
தேவ சமூகத்தில் காத்திருந்து ஆண்டவருடைய இருதயத்தின் எண்ணங்களை அறிந்து கொள்பவனே தேவசித்தத்தை செய்வான். தேவனோடு நெருங்கி ஜீவிப்பவனே தேவனை அறிந்து அவரதுசாயலாய் மாறி அவரை வெளிப்படுத்துவான். நாம் அனைவரும் தேவனை அறிந்தவர்களாக மாற வேண்டும்.அதுவே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மகிமையுள்ளதும் நம்முடைய ஊழியத்தை அதிகாரமுள்ளதாக மாற்றும்.
தேவனை அறிந்து கொள்வதை காட்டிலும் வேதாகமத்தை அறிந்து கொள்வது மிகவும் எளிது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வேசித்தனம் செய்து கொண்டும் பணத்தை இச்சித்து கொண்டும் உங்கள் சிந்தை வாழ்க்கையில் அசுத்தமாய் இருந்து கொண்டும் வேதாகமத்தை நன்கு அறிந்தவர்களாய் அருமையாக பிரசங்கம் செய்பவர்களாய் இருந்திட முடியும். ஆனால் உங்கள் தனிபட்ட வாழ்க்கையில் பணத்தை இச்சித்து கொண்டும் வேசித்தனம் செய்து கொண்டும் தொடர்ந்து தேவனை அறிந்தவர்களாய் ஒருக்காலும் வாழவே முடியாது. எனவே தான் பெரும் பாலான பிரசங்கிமார்கள் தேவனை அறிவதை காட்டிலும் இலகுவான பாதையாகிய வேதாகமத்தை அறிவதையே தெரிந்து கொள்கின்றனர். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவனையும்,இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்வதே நித்திய ஜீவன். (யோவான் 17-3)நீங்கள் வேத வசனத்தை அறிந்து கொண்டதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா?அல்லது தேவனை அறிய வேண்டும் என்கிற வாஞ்சையும் தாகமும் உங்களிடம் இருக்கிறதா?மத்தேயு 7 ம் அதிகாரத்தில் கள்ள தீர்க்கதரிசிகளை குறித்து எச்சரித்த இயேசு கிறிஸ்து அவர்கள் கனிகளால் அவர்களை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஒரு தேவ மனிதனையோ அல்லது ஒரு கள்ள போதகரையோ அவனது கனிகளினாலே ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும். அதே மாதிரி தேவன் எப்படிபட்டவர் என்பதை வெளிப்படுத்தியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
யோவான் 6:46 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். யோவான் 1-18 எனவே தான் இயேசு கிறிஸ்து என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்றார், அதாவது பிதாவை அறிந்த இயேசு கிறிஸ்துவே பிதா எப்படிபட்டவர் என்பதை காண்பித்தார்.இன்றைக்கு நாம் தேவனை அறிந்து கொள்ளவில்லையென்றால் ஜனங்களுக்கு தேவனை வெளிப்படுத்த முடியாது. சீஷர்களுக்குள்ளே நீ பெரியவானா நான் பெரியவனா என்ற வாக்குவாதம் வந்த போது இயேசு கிறிஸ்து ஒரு அடிமை செய்வது போல சீஷர்களின் கால்களை கழுவி நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். நமக்குள்ளே நான் பெரியவன் நீ பெரியவன் என்ற ஏற்றதாழ்வு வேண்டாம். நாம் ஒன்றாக ஒருமனமாக இருக்க வேண்டும் என்பதை காட்டினார். அதே மாதிரி தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் மூவரும் ஒன்றாக ஒரு முகமாக இருப்பதை அறியலாம். அவர்களில் யார் பெரியவர் என்று யாரும் எந்த மகிமையையும் எடுத்து கொள்ளாமல் ஒருவர் மற்றவரை மகிமைபடுத்துவதை அறிந்து கொள்ளலாம். இந்த இரகசியத்தின் ஐக்கியம் ஊழியம் செய்கிற ஊழியக்காரர்களிடமும் சபைகளிலும் இல்லை.
மேலும், இவர்கள் தங்களை தாங்களே மகிமை படுத்தி கொள்ளவே விரும்புகிறார்கள். இவர்கள் கிருபைகளையும் வரங்களையும் பெற்றவுடன் நான் பெரியவன் என்று தன்னை காட்டி கொண்டு தங்களை குறித்தும் தங்கள் ஊழியங்களை குறித்தும் மேன்மை பாராட்டி கொண்டிருக்கின்றனர்.இவர்கள் தேவனை இன்னும் அறியவில்லை. இயேசு கிறிஸ்து காட்டிய மாதிரியின் அடிசுவட்டை அறியாமல் யாரும் அவரை பின்பற்ற முடியாது. (அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2-6) என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்ததை விட பெரிய காரியங்களை செய்வான் என்ற இயேசுவின் சிந்தை உள்ளவனே இயேசுவை அறிந்தவன். இப்படிபட்டவன் மாத்திரமே பிறர் தேவனால் வல்லமையால் பயன்படுத்தப்படும் போது அதை பார்த்து பெருமிதம் கொள்ளுவான். நான் சாந்தமும் மனத்தாழ்மையாயிருக்கிறேன் என்று இயேசு சொன்னார்.
இன்றைக்கு தங்கள் வாழ்விலும் ஊழியப்பாதையிலும் பெருமையையும் வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறவர்களும் தேவனை இன்னும் அறியவில்லை. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. யாக்கோபு 1-17, இன்றைக்கு தேவனோடு நாம் நெருங்கி ஜீவிக்காததினால் ஜாதி இனம் பணக்காரன் ஏழை என்ற மார்க்கபேதங்களால் ஒருவருக்கொருவர் பிரிந்து கிடக்கிறோம். பட்சபாதம் இல்லாத வேற்றுமைகள் இல்லாத தேவனோடு நெருங்கி ஜீவிக்காதவன் மனிதர்களை பிரித்து பார்க்கிறான்.(நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார்.யோவான் 13-35)
சீஷன் என்பவன் குருவினுடைய அடிச்சுவட்டை பின்பற்றுகிறவன். தேவனை பற்றி அறிந்தவனே தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டு எல்லாரோடும் அன்பாக இருப்பான். அவன் இருதயம் தேவ அன்பினால் நிறைந்திருக்கும்..அதே மாதிரி தேவனை அறிந்தவன் மாத்திரமே அவர் பரிசுத்தராயிருப்பது போல நானும் பரிசுத்தமுள்ளவனாக ஆக வேண்டும் என்று வாஞ்சிப்பான். அவனே பரிசுத்தம் மேல் பரிசுத்தமடைந்து தேவனை தரிசிப்பான்.
நீங்கள் முதலாவதாக தேவனை அறிந்திருந்தால் மாத்திரமே உங்கள் மந்தையும் தேவனை அறிந்து கொள்ளும் படி நடத்திட முடியும். ஒருவன் வேத அறிவையும் வேதாகமத்தில் பட்டம் பெற்றதினிமித்தம் சாத்தான் ஒரு போதும் பயப்படுவதில்லைதேவனை அறிந்து பரிசுத்தமும் தாழ்மையும் கொண்டவர்களை கண்டு சாத்தான் அஞ்சி நடுங்குகிறான். (சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்.கொலோசெயர் 1-10 )தேவனை பற்றி அறிந்து கொள்வதற்க்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன் குப்பையாக எண்ணுகிறேன் என்று பவுல் சொன்னது போல தேவனை அறிந்து கொள்ள நாம் முதலிடம் கொடுப்போம். ஆமென்.