வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்கவேண்டுமானால்??!
Bro. Edwin Corter (Sohar-Oman)
புதுவருடம் பிறக்கப்போகிறது என்றால் எல்லாருடைய நினைவில் வருகிற ஒரு காரியம் என்னவென்றால் வாக்குத்தத்தம் இந்த வாக்குத்தத்தத்தைப் பெறுவதற்காக சபைக்கு வராத ஜனங்கள் கூட அன்றைய நாளில் எப்படியாவது சபைக்கு வந்து விடுவார்கள், ஜெப கூடுகைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள், உபவாசத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் ஆனால் கர்த்தர் தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்கிற காரியத்தில் மாத்திரம் கர்த்தரை தேடுகிறவர்களாய் இருப்பார்கள்.
ஆகவே அனேகருடைய வாழ்க்கையில் காணப்படுகிற நம்பிக்கை என்னவென்றால் வருடத்தின் தொடக்கத்தில் சபைக்கு சென்று ஆசீர்வாதமான வாக்குத்தத்த அட்டையை பெற்று விட்டால் அந்த வருடம் முழுவதும் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாய் இருக்கும் என்பது அனேகருடைய நம்பிக்கையாய் இன்றைய நாட்களில் காணப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
நம்முடைய கர்த்தரும் இரக்கமுள்ளவர் ஆயிற்றே ஆகவே தம்முடைய பிள்ளைகளுடைய விருப்பத்தின்படியே அனேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார். இவர்களும் இந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வீட்டிற்கு செல்லுகிறார்கள். இவர்களுடைய எண்ணம் கர்த்தர் தனக்கு கொடுத்த வாக்குத்தத்தம் உடனே நிறைவேறி விடும் என்பதாக.
ஆனால் என்ன நடக்கிறது இந்த வாக்குத்தத்தத்தை எப்படி இவர்கள் கர்த்தருடைய கையில் இருந்து பெற்றுக் கொண்டார்களோ? அப்படியே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இதற்குக் காரணம் கர்த்தரிடம் இருந்து பெற்றுக் கொண்ட வாக்குத்தத்தத்தை எப்படி சுதந்தரித்துக் கொள்வது என்பது இவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே. ஆகவே இன்றைய மாதத்தின் மறைவான மன்னாவில் எப்படி நாம் வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளப் போகிறோம் என்பதைக் குறித்து பின்வருமாறு தியானிக்கப் போகிறோம்.
வேதம் சொல்லுகிறது, அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். எபிரெயர் 10:23.
அடுத்ததாக, வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
1. விசுவாசம்
2. நீடிய பொறுமை
3. கீழ்ப்படிதல்
4. உத்தமம்
5. இழப்பு
முதல் ஏணிப்படி: விசுவாசம்
வேதம் சொல்லுகிறது, விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். எபிரெயர் 11:6
எப்படிப்பட்ட விசுவாசத்தை கர்த்தர் அங்கீகரிக்கிறார்?
கர்த்தர் சொன்னதைக் கண்டு அதாவது வாக்குத்தத்தத்திற்கான அடையாளத்தைக் கண்டு விசுவாசிப்பதையல்ல, மாறாக கர்த்தர் சொன்னதை கண்மூடித்தனமாக அதாவது விசுவாசிப்பதற்கு ஏதுவான சூழ் நிலைகள் காணப்படாவிட்டாலும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்கிற வெளிப்பாட்டுடன் கூடிய விசுவாசத்தையே கர்த்தர் அதிகமாக எதிர்ப்பார்க்கிறார்.
பாருங்கள் தோமாவிடம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சொன்னப் போது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை இதற்கு தோமா கூறிய பதில் கர்த்தராகிய இயேசுவை உயிரோடு பார்த்தால் மாத்திரமே உயிர்த்தெழுந்ததை விசுவாசிப்பேன். அப்படியில்லாத பட்சத்தில் அதை விசுவாசிக்க மாட்டேன் என்று சொன்னார்.
இதைக் கேட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்ன மறுபடி என்னவென்றால், அதற்கு இயேசு தோமாவே நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். யோவான் 20:29. ஆனால் மறுபக்கம் ஆபிரகாமை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது, உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே தான் அனேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.
அவர் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை அவர் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும் போது தன் சரீரம் செத்துப் போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தி விசுவாசித்தில் வல்லவனானான். ரோமர் 14:18,19,21. தன்னுடைய 75 வயதில் ஆபிரகாம் கர்த்தரிடம் இருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றார் ஆனால் நாள்கள் செல்ல செல்ல அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுகிறதற்கான சூழ் நிலைகள் மாறிப்போயின. ஆனாலும் ஆபிரகாம் அந்த சூழ் நிலைகளைப் பார்க்காமல் சூழ் நிலைகளை மாற்றுகிற கர்த்தரையே நோக்கிப் பார்த்து, ஒவ்வொரு நாளும் விசுவாசித்தில் பெலப்பட்டார் என்று வேதம் நமக்கு சொல்லுகிறது.
இதனால் விசுவாசிகளின் தகப்பன் என்கிற பெயரையும் கர்த்தரால் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் கர்த்தருடைய சிநேகிதன் என்று சொல்லப்படுவதற்கு தகுதியுள்ள பாத்திரமாக மாறினார். இதற்கெல்லாம் காரணம் விசுவாசமே ஆகும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். விசுவாசம் இருந்தால் மட்டும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமுள்ளவர்களாய் மாற முடியும் என்பதை எப்பொழுதும் உங்கள் இருதயத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இயேசு அவனை நோக்கி நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும் விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மாற்கு 9:23.
இரண்டாவது ஏணிப்படி: நீடிய பொறுமை
வேதம் சொல்லுகிறது, நீடிய பொறுமை ஆவிக்குரிய கனிகளில் ஒன்றாயிருக்கிறது. கலாத்தியர் 5:22.
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதமாயிராமல் ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாற்றும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2பேதுரு 3:9
இந்த வசனத்தை வாசிக்கும் போது நாம் ஒரு காரியத்தை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு கோபம் வரும் போதும், நமக்கு விரோதமாக யாரவது தீமையான காரியத்தை செய்துவிட்டாலோ அல்லது யாராவது நம்மை ஏமாற்றி விட்டாலோ நாம் உடனே தமக்கு விரோதமாக பெரிய பெரிய குற்றங்களை செய்த ஜனங்களை மன்னித்த இயேசுவை மனதில் நினைக்க வேண்டும்.
ஏனென்றால் நாம் எத்தனைவிதமான பாவங்களை கர்த்தருக்கு விரோதமாக செய்து இருக்கிறோம் மற்றும் இன்னும் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆண்டவர் அதற்கான தண்டனையை நமக்குத் தராமல் நாம் மனம் திரும்பும்படியாக நம் ஒவ்வொருவருக்காகவும் காத்திருப்பதை நாம் உணர முடிகிறது.
பாருங்கள், யோபுவைக் குறித்து கர்த்தர் சாட்சிக் கொடுப்பதற்காக பிசாசின் சோதனைகளுக்கு ஒப்புக் கொடுத்தார். ஒரு மனுஷனுக்கு நேரிடக்கூடாத காரியங்கள் எல்லாவற்றையும் பிசாசானவன் யோபுவின் வாழ்க்கையில் கொண்டு வந்தான். ஆனால் யோபு இவைகள் எல்லாவற்றினாலும் அவர் கர்த்தரைக் குறித்து குறை சொல்லவேயில்லை என்று வேதம் சொல்லுகிறது.
அதுமாத்திரமல்ல அவர் நீடிய பொறுமையுடன் தனக்கு நேரிட்ட எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டார் என்று வேதம் சொல்லுகிறது. இந்த நீடிய பொறுமைக்கு யோபுக்கு கிடைத்த பரிசு என்னத் தெரியுமா?
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். யோபு 42:12.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே அனேக நேரத்தில் நாம் பாவம் செய்வதற்குக் காரணம் நம்மிடத்தில் ஆவியின் கனிகளில் ஒன்றான இந்த நீடிய பொறுமை நம்மிடத்தில் இல்லாமல் இருப்பதே இதனால் இன்று அனேகர் அதிக நன்மைகளை கர்த்தரிடத்திலிருந்து பெற முடியாமல் இருக்கிறது.
வேதம் சொல்லுகிறது, இதோ நீடிய பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யாக்கோபு 5:11. நீங்களும் நீடிய பொறுமையாயிருந்து உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள் கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. யாக்கோபு 5:8.
மூன்றாவது ஏணிப்படி: கீழ்ப்படிதல்
வேதம் சொல்லுகிறது, பிள்ளைகளே உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள் இது நியாயம். எபேசியர் 6:1.
கீழ்ப்படிதல் இல்லாதவர்கள் நிச்சயமாக ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர முடியாது மற்றும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு சொந்தக்காரராகவும் மாற முடியாது என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு அனேக ஊழியங்களும் குடும்ப வாழ்க்கைகளும் ஆவிக்குரிய வாழ்க்கையும் முறிந்து போவதற்குக் காரணம் கீழ்ப்படிதல் என்கிற குண நலன் இவர்களிடம் இல்லாமல் இருப்பதே.
பாருங்கள் ஆபிரகாமின் விசுவாசம் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமான காரணம் அவரிடத்தில் காணப்பட்ட கீழ்ப்படிதலே ஆகும் எப்படியென்றால் கர்த்தர் ஆபிரகாமை எல்லாவற்றையும் விட்டு விட்டு தம்மை பின்பற்றி வர சொன்ன போது அவர் யாருடனும் ஆலோசனை செய்யவில்லை மற்றும் சாதகமான சூழ் நிலைகளுக்காக காத்திருக்கவும் இல்லை.
உடனே எல்லாவற்றையும் விட்டு விட்டு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார் என்று ஆதியாகமத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் கர்த்தரிடத்தில் தனக்கு மற்றும் தன்னுடைய சந்ததிகளுக்கும் ஆசீர்வாதத்தை இலவசமாக பெற்றுக் கொன்டார்.
மாறாக சவுலின் வாழ்க்கையை எடுத்து கொள்வீர்களானால் இவருடைய வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் என்கிற குண நலன் இல்லாமலேயே காணப்பட்டது. காரணம் இவர் எல்லாவற்றிலும் தன்னை மேன்மைப்படுத்த விரும்பினார். அதுமாத்திரமல்ல இவர் மாமிசத்தில் வாழுகிற ஒரு மனுஷனாகவே காணப்பட்டார். ஆகவேதான் எப்பொழுதும் மாமிசத்தோடு போராடிக் கொண்டே இருந்தார். இதனால் ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுக் கொளாமல் போய்விட்டார். ஆவிதான் ஒரு மனுஷனை சரியான கீழ்ப்படிதலுக்குள்ளாக நடத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஏனென்றால் மாமிசம் எப்பொழுதும் கர்த்தருக்கு விரோதமாய் போராடிக் கொண்டிருக்குமே தவிர அது ஆவியின் காரியங்களுக்கு ஒருபோதும் சம்மதம் தெரிவிக்காது என்பதை மறந்து விட வேண்டாம்.
இதனால் சவுல் இந்த உலகத்தில் பரிதாபமாக மரித்துப் போனான் என்று பார்க்கிறோம். ஏனென்றால் ஆரம்பத்தில் ஆவியில் தொடங்கின வாழ்க்கை முடிவில் மாமிசத்தில் வந்து சேர்ந்தது. கீழ்ப்படிதல் யாரிடம் எல்லாம் இல்லையோ அவர்களை கர்த்தரால் நிச்சயமாக பயன்படுத்த முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.
எனக்குப் பிரியமான தேவ பிள்ளைகளே இன்று பிசாசானவன் எல்லாவற்றிலும் கிரியை செய்வதற்குக் காரணம் நம்மிடம் காணப்படுகிற கீழ்ப்படியாமையே. கர்த்தர் சொல்லியிருக்கிறார், நமக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்கள் துன்மார்க்கமாய் இருந்தாலும் அவர்களுக்கு கீழ்ப்பட்டு நடக்க வேண்டும் அப்படி செய்யும் போது மாத்திரமே கர்த்தர் நமக்கு நியாயம் செய்வார்.
வேதம் சொல்லுகிறது, ஆகையால் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7.
நான்காவது ஏணிப்படி: உத்தமம்
வேதம் சொல்லுகிறது, உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு [கர்த்தர்] நன்மையை வழங்காதிரார். சங்கீதம் 84:11.
கர்த்தர் ஆபிரகாமை அழைத்தார் ஆபிரகாமும் கர்த்தருடைய அழைப்புக்கு கீழ்ப்படிந்தார். அதுமட்டுமல்லாமல் ஆபிரகாமை அழைத்த தேவன் அவருக்கு விசேஷித்தமான வாக்குத்தத்தங்களை செய்துக் கொடுத்தார். மேலும் கர்த்தர் ஆபிரகாமை பார்த்து சொன்னார் உன் பேரை வருகிற ஒவ்வொரு தலைமுறைகளிலும் நினைக்கச் செய்வேன் என்பதாக அடுத்ததாக நாட்கள் செல்ல செல்ல அதாவது வாக்குத்தத்தம் கைகூடி வருகிறதற்கான சூழ் நிலைகள் உருவான போது திடீரென கர்த்தர் ஆபிரகாமிற்கு புதிதான ஒரு கட்டளையைக் கொடுத்தார்.
எப்படியென்றால், ஆபிரகாம் தொண்ணூற்றொன்பது வயதானபோது கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசினமாகி நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் 17:1,2.
ஆபிரகாம் தன்னுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரித்து கொள்வதற்காக தனக்கு பெலன் இல்லாத சூழ் நிலைகளிலும் அதாவது சாகவேண்டிய கடைசி கட்டத்தில் இருந்த போதிலும் அவர் கர்த்தருக்கு முன்பாக உத்தமனாக நடந்து வேதத்துலுள்ள எல்லா வாக்குத்தத்தங்களுக்கும் தன்னை முன்னோடியாக மாற்றினார் என்று பார்க்கிறோம்.
ஆகவே நாமும் இப்படிப்பட்ட மகத்தான வாக்குத்தத்தங்களுக்கு நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமானால் முதலாவது நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமிடம் காணப்பட்ட உத்தமம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நாம் ஆபிரகாமின் உடன்படிக்கைக்கோ அல்லது அவருடைய வாக்குத்தத்தத்திற்கோ நாம் ஒருபோதும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வேதம் சொல்லுகிறது, அவனுடைய எஜமான் அவனை நோக்கி நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய் அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். மத்தேயு 25:21.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மையும் பார்த்து இவ்வாறாக சொல்ல வேண்டுமானால் நாம் முதலாவது கர்த்தரிடத்தில் உத்தமமாய் இருக்கக் கற்றுக் கொள்வோம். அதன்பிறகே நாம் அவருடைய ஊழியத்திற்கு வேலைக்காரர்களாக மாற முடியும். அதாவது பரலோகராஜ்ஜியத்தின் தூதராக நியமிக்கப்படுவோம்.
ஐந்தாவது ஏணிப்படி: இழப்பு
வேதம் சொல்லுகிறது, என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது சகோதரரையாவது சகோதரிகளையாவது தகப்பனையாவது தாயையாவது மனைவியையாவது பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ அவன் நூறத்தனையாய் அடைந்து நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்ளுவான். மத்தேயு 19:29.
எனக்குப் பிரியமான தேவ ஜனங்களே ஆவிக்குரிய அதாவது பரலோகராஜ்ஜியத்தின் வாக்குத்தத்தங்களுக்கு நாம் சொந்தகாரராக மாற வேண்டுமானால் முதலாவது நம்மிடத்தில் காணப்படுகிற உலகத்தின் காரியங்களை இழக்க முன்வர வேண்டும். உலகத்தை தன்னோடு வைத்திருக்கிறவர்களுக்கு தேவனுடைய மகத்துவத்தை ஒருபோதும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காது என்பதை மறந்து விடாதீர்கள்.
பாருங்கள் நியாயப்பிரமாணத்தை தூக்கிக் கொண்டு நடந்த பவுலின் வாழ்க்கையில் நடந்த காரியங்களை வாசிக்கும் போது நமக்கு ஒரு காரியம் நன்றாக தெரியவரும் அவர் அந்த நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதின் மூலம் தன்னுடைய சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்களை திருப்திப்படுத்த முடிந்ததே தவிர கர்த்தரை அவரால் ஒருபோதும் நியாயப்பிரமாணத்தின் ஹீரோவாக இருந்து திருப்திப்படுத்தமுடியவில்லை.
உலகம் அவரை மேன்மைப்படுத்தியதே தவிர கர்த்தருக்கு முன்பாக ஒரு பாவியான நிர்வாணமான மனுஷனாகவே காணப்பட்டான். எப்பொழுது கர்த்தராகிய இயேசுவால் சந்திக்கப்பட்டானோ அந்த நாளிலே அவருடைய ஆவிக்குரிய கண்கள் திறந்தது. அப்பொழுதுதான் அவருக்கு ஒரு காரியம் புரிந்தது. பரலோகத்திலிருந்து எதையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமானாலும் தன்னிடத்தில் காணப்படுகிற உலகத்தின் பொருட்களை முதலாவது கர்த்தரிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆகவேதான் அப்.பவுல் இவ்வாறாக எழுதுகிறார்,
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலேசெயர் 3:2 ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணுகிறேன் அதுமாத்திரமல்ல என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:7,8. மேலும் அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன் குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:11.
அடுத்ததாக, வோவான் எழுதும் போது, உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 1யோவான் 2:15. ஆகவே பிதாவின் அன்பிற்கு நாம் சொந்தக் காரராக மாறவேண்டுமானால் முதலாவது அவருக்கும் நமக்கும் இடையில் பிரிவினையாய் நின்றுக் கொண்டிருக்கிற எல்லா பாவங்களையும் இழக்க முன்வரவேண்டும். அப்பொழுது மாத்திரமே நாம் வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா வாக்குத்தத்தத்திற்கும் சொந்தக்காரராக மாற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாக்குத்தத்தத்தை நிறைவேற்றவும் வாக்குத்தத்தங்களை கொடுக்கவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு உண்மையுள்ளவராக இருக்கிறாரோ நாமும் அந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ள அவருக்கு உண்மை உள்ளவராய் வாழுகிறோமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கர்த்தர் தாமே நமொவ்வொருவரையும் இந்த செய்தியின் மூலம் ஆசீர்வதிப்பாராக! ஆமென்