உத்தம ஊழியக்காரன்
நீ வெட்கபடாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15.
ஊழியம் செய்கிற மேலும் வேத வசனத்தை போதிக்கிற நீ மனுஷருக்கு முன்பாக மாத்திரமல்ல தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருக்கும் படி பவுல் எச்சரிக்கிறார்.அதாவது ஊழியம் செய்கிற நாம் நம்முடைய நடக்கைகள் செய்கைகள் எல்லாவற்றிலும் உண்மையும் உத்தமுமாய் இருக்க வேண்டும். அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். மத்தேயு 25-21.
அதாவது நம் எஜமானாகிய தேவன் நமக்கு கொடுக்கும் கொஞ்ச காரியங்களில் உண்மையுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் நாம் பரலோக ராஜ்ஜியத்தில் பங்குள்ளவர்களாக மாறுகிறோம்.( தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என்கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும், உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான். சங்கீதம் 101-6. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை நோக்கி வந்த நாத்தான்வேலை பார்த்து கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.(இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்துஇதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். யோவான் 1-47.
இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேகர் தங்கள் ஊழிய பணியில் கூட பொய் சொல்லுகிறவர்களாகவும் கபடுள்ளவர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் ஊழியங்களில் தேவ ஆலோசனைகளை தள்ளி விட்டு மாம்சமும் மனசும் விரும்பினவைகளையே தொடர்ந்து செய்து கொண்டு இறுதியில் தேவ மகிமையை இழந்து போகிறார்கள். நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.கொலோசெயர்3:22 என்று பவுல் சொல்வது போல இன்றைக்கு நாம் மனுஷர்களை பிரியப்படுத்தி அவர்கள் பார்க்கும் படிக்கு நம் ஊழியங்களை தெரியப்படுத்துகிறோம்.ஜனங்கள் நம் ஊழியங்களை தெரிந்து கொண்டு அவர்கள் நம்மை மேன்மைபடுத்தும் படியாக நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது.இதை தான் இயேசு கிறிஸ்து மனுஷர் முன்பாக மேன்மையாக எண்ணப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாக இருக்கிறது என்றார்.லூக் 16-15.
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2 கொரிந்தியர் 10-18. ஊழியத்திலோ உங்கள் பிரசங்கங்களிலோ உங்களை நீங்களே புகழாதப்படிக்கு மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஊழியங்களில் ஜனங்கள் இரட்சிக்கப்படும் படிக்கும் இருளின் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப்படும் படிக்கு தேவனே கிரியை நடப்பிக்கிறார். ஊழியக்காரர்களாகிய நீங்கள் தேவனால் பயன்படுத்தப்படுகிறீர்கள். எனவே தான் சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து ஊழியத்தை செய்து முடித்தப் பிறகு அப்பிரயோஜனமான ஊழியக்காரன் கடமையை மாத்திரம் செய்தேன் என்று சொல்ல சொன்னார். பவுலும் ஊழியத்தை குறித்து மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை அது என் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது என்றார்.
எனவே நீங்கள் இணையத்தளங்களிலும் ஜனங்கள் மத்தியிலும் உங்களை உயர்த்தி கொள்ளும் நோக்கில் மனித புகழ்ச்சியை நாடும் படி உங்கள் ஊழியங்களை குறித்து மேன்மை பாராட்டி கொண்டிருப்பீர்களென்றால் உங்களுக்கு பரலோகத்தில் எந்த பிரதிபலனும் கொடுக்கப்படாது. இன்றைக்கு இணையதளங்களில் தங்களை பற்றியும் தங்கள் ஊழியங்களை பற்றியும் மனிதர்களுக்கு தெரியப்படுத்தும் படி தாரை ஊதுகிறவர்கள் அநேகம் பேர். இவர்கள் தங்கள் பலனை இந்த பூமியிலே அடைந்து விடுவார்கள்.பரலோகத்தில் இவர்களுக்கு எதுவுமில்லை. இன்றைக்கு அநேக மிஷனரிகள் தங்கள் குடும்பத்தை பிரிந்து நெருக்கங்களிலும் உபத்திரவங்களிலும் தேவனுக்காக கிராமம் கிராமமாக ஆத்தும ஆதாயம் செய்கிறார்கள்.இப்படி மறைந்திருந்து தேவனுக்கு முன்பாக தங்களை உத்தமமாக காண்பிக்கிற ஊழியக்காரர்களை மட்டுமே தேவன் உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று அழைத்து அவனை கனப்படுத்துவார். (கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?
சங்கீதம் 15:1 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. சங்கீதம் 15:2.
எனவே பிரியமான ஊழியக்காரர்களே பரலோகம் உன்னை அங்கீகரிக்க வேண்டுமென்றால் முதலாவதாக தேவனுக்கு முன்பாக உங்களை உத்தமனான நிறுத்தி கொண்டு சத்தியத்தை போதியுங்கள். ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. என்றார்.
ஆதியாகமம் 17-1. ஊழியம் செய்து அநேகரை தேவனுக்காக ஆதாயப்படுத்தினாலும் நாம் தேவனுக்கு முன்பாக நம் செயல்கள் மற்றும் கிரியைகளெல்லாம் எல்லாம் உத்தமமாக இல்லையென்றால் ஒரு பிரயோஜனமில்லை. எனவே முதலாவதாக நாம் உண்மையும் உத்தமமுமாக வாழும் படி நம்மை ஒப்பு கொடுப்போம். ஆமென்.