top of page

ஊழியங்களுக்கு எதிரான தடைகளுக்கு நம்முடைய விளம்பரம் தான் காரணம்

 

ரு வாரத்துக்கு முன் You tube ல்  ஒரு ஊழியக்காரர் நான் 30 பேருக்கு ஞானஸ்நானம்   கொடுத்தேன் என்ற Video வெளியிட்டிருந்தார். அந்த லிங்க் அனேக WhatsApp குழுக்களிலும் Face book லும் வருகிறது இன்னொரு ஊழியக்காரர் கிராமங்களுக்குப் போய் சுவிசேஷம் அறிவிப்பதை அநேக புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். ஃபேஸ்புக்கில் இவர்களை அநேகர் பாராட்டியிருந்தார்கள். ஆனால் இதையெல்லாம் பார்க்கும் எதிராளிகள்  நமக்கு எதிராக அந்த பகுதிக்கே சென்று தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது.
 

நம்முடைய எதிராளிகள் ஊழியங்களுக்கு விரோதமாக தீவிரித்து வருகிறார்கள். அப்படியிருக்க இந்த நாள்களில் உங்களுடைய ஊழியத்தை ஏன் பகிரங்க படுத்துகிறீர்கள். ஏன் தாரை ஊதுகிறீர்கள். மக்கள் முன்பாக உங்களை உயர்த்தும் படிக்கு ஊழியத்தில் வீண் புகழ்ச்சியை விரும்பாதீர்கள்! அது தேவனுக்கு பிரியமில்லாத காரியம்.

 

சுவிசேஷத்தை குறித்து மேன்மை பாராட்ட எனக்கு இடம் இல்லை அது என் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது என்று பவுல் சொன்னார். நீங்கள் ஐம்பது பேருக்க்கு அல்லது நூறு பேருக்கு   ஞானஸ்நானம் கொடுத்திருக்கலாம். ஆனால் அதை வெளியே சொல்ல வேண்டாம். பல இடங்களில் சுவிசேஷம் அறிவித்து அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் அதை ரகசியமாக செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெளியே வந்து நமக்கு எதிரானவர்கள்  காதுகளுக்கு போகிறது.அவர்கள் உங்களை மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்லி உங்கள் பதிவுகளை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் ஒரு பெரிய நெட்வொர்க்கை வைத்திருக்கிறார்கள். நீங்கள் எந்த இடத்தில் ஊழியம் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு உடனடியாக தெரிந்துவிடும், உடனே அவர்கள் அந்த பகுதிக்கு போய் தடைகளை ஏற்படுத்த நாமே காரணமாகி விடுகிறோம்.

 

பல ஊழியக்காரர்கள் வட இந்திய பகுதிக்கு போகும் போது அங்கே ஞானஸ்தானம் கொடுப்பது சுவிசேஷம் அறிவிப்பது பிரசங்கம் பண்ணுவது போன்ற காரியங்களை  இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்.. நாளைக்கு இதுவே அவர்களுக்கு ஒரு பெரிய தடையாய் வரும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நாளைக்கு  தமிழ்நாட்டிலிருந்து எந்த ஊழியக்காரர்களும் எங்கள் மாநிலத்துக்கு வரக்கூடாது என்று தடை பண்ணுவதற்கு நம்முடைய சுய விளம்பரங்கள் காரணமாகி விடக்கூடாது. நாளை மத மாற்ற தடை சட்டத்திற்கு நம்முடைய விளம்பரங்களே காரணமாகி விடும்.ஒரு வேளை உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்பவர்களுக்கும் உங்கள் ஊழியங்களை தாங்குகிறவர்களுக்கும் Personal ஆக உங்கள் ஊழியங்களை குறித்த காரியங்களை அனுப்பலாம்.மேலும் உங்கள் WhatsApp குழுக்களிலே உங்களுக்கு எதிரானவர்கள் மறைந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

 

கடந்த நாள்களில் ஒரு போராட்டத்தில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் அரசாங்கத்தை பார்த்து எங்களால் தான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்று அறிவித்தார். மேலும், அவர் கூறியதாவது நாங்கள் 60 சதவிகிதத்திற்கு மேல் பெருகி விட்டோம் என்று பேசினார்.இது யாரை பாதிக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.இவர் பேசியது நாளைக்கு மத மாற்ற தடை சட்டத்தை அமல் படுத்துவதற்கு வழி வகுக்கும். வரக்கூடிய நாள்களில் நம்முடைய விளம்பரங்களினால் புறமதத்தினர் கூட மத மாற்ற தடை சட்டத்தை ஆதரிக்க கூடும்.மேலும் உடனடியாக செயல்படுத்துங்கள் என்று சொல்ல கூடும்.

 

பிரியமானவர்களே, சைனா போன்ற  கம்யூனிஸ்ட் நாடுகளிலும் மற்றும் சுவிசேஷம் தடைப்பட்ட பல தேசங்களிலும் அநேகர் கிறிஸ்துவை ஏற்று கொண்டு ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.அந்த தேசங்களில் ஒரு பெரிய  எழுப்புதல் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் ஊழியங்களை பற்றி இணையத்தளங்களில் பதிவிடுவதில்லை. தங்கள் ஊழியங்களை பற்றி எங்கும் விளம்பரப்படுத்துவதில்லை. எந்த ஒரு காரியத்தையும் பகிரங்கப்படுத்துவது இல்லை.ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றால் இரண்டு பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தால்,உலகம்  தங்களைப் புகழும் விதமாய் இணையத்தளங்களில் வெளியிடுகிறார்கள்.

இது நம்முடைய எதிராளிகளுக்கு எளிதாக போய் விடுகிறது.
 

நீங்கள் பதிவிடும் ஞானஸ்நானம் பற்றிய காரியங்களை அவர்கள் மத மாற்றம் என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள்.
 

தமிழ்நாட்டில் உள்ள பல ஊழியக்காரர்கள் விளம்பரப்பிரியர்களாகவே இருக்கிறார்கள். சபைகளில்  இவர்கள் பேசும் பேச்சுக்கள் இணையத்தளத்தில் பதிவிடப்படுவதால்

இவர்களின் ஞானமில்லாத தகாத வார்த்தைகள் மேலும் அரசாங்கத்துக்கு எதிராக மேலும் பிற மதத்திற்கு எதிரான பேச்சுக்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.ஒரு நாள் இவர்கள் மேல் வழக்கு தொடரப்படலாம்?! இவர்கள் சிறைச்சாலைக்கு கூட போகலாம்!?
 

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபலமான ஊழியக்காரர் பிற மதத்தினரை பற்றி ஒரு அறையில் பேசின பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.அவர் மேல் வழக்கு தொடரப்பட்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது, அந்த video வை வெளியே கொண்டு வந்தவர் அவரோடு இருந்த ஒருவர் தானே.

 

பிரியமானவர்களே ஊழியங்களையும் உங்களையும் குறித்து விளம்பரப்படுத்துவதை  உடனடியாக நிறுத்துங்கள்.
 

ஊழியத்தை குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தேவன் பெருமை உள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார்.எந்த நோக்கத்துக்காக விளம்பரப்படுத்துகிறீர்கள் என்கிற வீண் புகழ்சியை தேடும் உங்கள் இருதயத்தை தேவன் அறிவார்.தேவன் அனுமதிக்காமல் உங்கள் ஊழியங்களை இணையதளங்களில் பதிவிடாதீர்கள். ஒரு வேளை பிறருக்கு பக்தி விருத்தியை உண்டாக்கும் நோக்கத்தில் சுவிசேஷம் அறிவிப்பதையும் கூட்டமாக ஜனங்கள் ஞானஸ்நானம் பெறுவதையும் நீங்கள் பதிவிட முயற்சிக்கலாம்.ஆனால் அப்படி பட்ட நல்ல சூழ்நிலை இன்றைக்கு இல்லை. அது உங்களுக்கு எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கி விடும். அநேக ஊழியக்காரர்கள் வெளியே தெரியாமல் தங்களை மறைத்து அற்புதமாக ஊழியம் செய்கிறார்கள்.

 

எனக்கு தெரிந்த ஒரு குழுவினர் மறைந்திருந்து இந்தியா முழுவதும் வைராக்கியமாக ஊழியம் செய்கிறார்கள்.பல இடங்களில் வீடுகள் தோறும் அணி சபைகளை உருவாக்கி அநேகரை இரட்சிப்புக்குள் நடத்துகிறார்கள். அவர்கள் மூலம் அநேக அற்புத அடையாளங்கள் நடக்கிறது.அவர்களது ஊழியங்களில் கர்த்தர் வல்லமையாக கிரியை செய்கிறார்.அவர்கள் காணிக்கை வாங்குவதில்லை, தங்களை பற்றி வெளியே சொல்வதில்லை.

 

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2 கொரிந்தியர் 10-18
 

கர்த்தர் உங்களை உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று சொல்ல வேண்டுமா?அல்லது உங்களை எனக்கு தெரியாது என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்ல வேண்டுமா?

தேவன் அனுமதிக்காமல் உங்கள் ஊழியங்களை பற்றி தாரை ஊதுவியாதீர்கள். முடிந்த அளவு மறைந்திருந்து ரகசியமாக ஊழியம் செய்யுங்கள். அப்பொழுது அந்தரங்கமாக பார்க்கிற தேவன் வெளியரங்கமாக பலனளிப்பார்.

 

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

எபேசியர் 5-16 
 

 புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

கொலோசெயர் 4-5

 

ஆமென்

bottom of page