top of page

தங்கள் மேலே சிறையிருப்பு

 

இன்றைக்கு சில கிறிஸ்தவர்கள் தங்கள்  தன் சகோதரர்களோடும்,  அடுத்தவர்கள் மேலும் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடர்ந்து,  அதற்காக ஏராளமான பணத்தையும் செலவு செய்கிறார்கள். மண்ணாசையினாலும் அடுத்தவர்களை  குற்றவாளி கூண்டில் நிறுத்தி அவர்களுக்கு  அநியாயம் செய்கிறார்கள். தான் மரிக்கும் போது ௭தையும் கொண்டு போவதில்லை என்று அறிந்தும் இதை செய்கிறார்கள். பண ஆசை!!!…  இது பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது??

 

வழக்கு மன்றத்தில் வழக்கு தொடர்வதனால் நீங்கள் உங்கள் சகோதரனுக்கு நஷ்டத்தை உண்டு பண்ணுகிறீர்கள். அநியாயம் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்று எச்சரித்தும் அதை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதே மாதிரி விவாகரத்தும் கிறிஸ்தவ குடும்பங்களில் தான் அநேகம் நடக்கிறது. இதற்கு காரணம் சத்தியத்தின் படி தங்கள் பிள்ளைகளை வழி நடத்தாத பெற்றோர்களும் மேலும் சத்தியத்தை சத்தியமாக போதிக்காத சபைகளும் தான்.புறஜாதி ஐனங்களுக்கு முன்பாக யோக்கியமாக நடந்து கொள்ளுங்கள் என்று வேதம் எச்சரிக்கிறது. அது மாத்திரம் அல்ல சபைகளில் பதவிகளுக்காக வழக்கு மன்றத்தில் போய் சண்டை போடுகிறார்கள்.

இவர்கள் எல்லாரும் பிற மதத்தினருக்கு இடறலை உண்டாக்கி இயேசுவின் நாமத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்குகிறார்கள்.

 

பிரியமானவர்களே, உங்கள் வக்கீலோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களோ சமாதானத்துக்கு எதிராக உங்களிடம் வழக்கு தொடருங்கள் ஒரு கை பார்த்து விடலாம் என்று உங்களை தூண்டிவிடும் போது ஒன்றை நினைத்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களை தேவனுடைய கற்பனைகளுக்கு எதிராக அநியாயம் செய்ய தூண்டுகிறார்கள் மேலும் உங்களை நரகத்துக்கு நேராக வழி நடத்துகிறார்கள் என்பதை நினைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள். என்று இயேசு சொன்னார். இவர்கள் உங்களை தூண்டி விட்டு பிறரை குற்றவாளிகளாக தீர்க்கும் படி செய்கிறார்கள்.பிறருக்கு நஷ்டத்தை விதைக்கும் படி செய்கிறார்கள். எனவே உங்களுக்கு ஒரு அறுவடையின் நாள் இருக்கிறது.ஒரு வேளை நீங்கள் அறுக்காமல் இருக்கலாம். ஆனால் உங்கள் சந்ததிகள் நீங்கள் செய்த தீமைக்கு தீமையை அறுக்க கூடும்.

உன் சந்ததியை நன்மையும் கிருபையும் தொடர வேண்டுமென்றால் பிறருக்கு  தீமையையும் அநியாயத்தையும் விதைக்காதீர்கள்.

அநியாயம் செய்பவர்கள் அதன் பலனை புசிப்பார்கள்.பட்சபாதமே அல்ல.

 

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.   மத்தேயு 7-1

 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா?   ரோமர் 2-3

 

இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.   ரோமர் 14-13

 

உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

 சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.

 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை,ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே.

 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா?  1 கொரிந்தியர் 6:5-9

 

அநியாயக்காரர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை என்ற வார்த்தையை கவனித்தீர்களா?மனசும் மாம்சமும் விரும்பின காரியங்களை செய்து கொபாக்கினையை உங்களுக்கு சேர்த்து வைத்து கொள்ளாதீர்கள்.

 

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். ரோமர் 2:5,6.

 

மேல் சொல்லப்பட்ட வசனங்களை ஒரு முறை கூட கவனமாக படித்து பாருங்கள்.நாம் மண்ணாசையினாலே பிறருக்கு அநியாயம் செய்கிறோம். அவர்கள் மேல் குற்றம் சுமத்தி கோர்ட்டுக்கு வரவழைத்து அவர்களை குற்றவாளியாக தீர்க்கிறோம்.

தேவ நீதியின் படி நாம் பிறரை அளந்த அளவின் படி நாமும் அளக்கப்படுவோம்.

தேவன் மனிதனுக்கு முன்பாக நன்மையையும் தீமையையும் வைத்திருந்தாலும் மனிதன் தீமையை அறுவடை செய்யும்படி தீமையை செய்கிறான்.

 

 தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பிப்போவான். அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை.

பிரசங்கி 5:15 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. பிரசங்கி 5:10

 

இன்றைக்கு ஆலயத்துக்கு போகிற கிறிஸ்தவர்கள் தங்களுக்கு போதிய செல்வம் இருந்த போதும் பிறருடைய நிலத்தின் மேல் வழக்கு போட்டு அவர்களை மனமடிவாக்கி அவர்களை குற்றவாளியாக தீர்த்து குற்றவாளியாக நிறுத்துகிறார்கள்.

 

பல வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவம் எனக்கு தெரிந்த ஒருவர் வட இந்தியாவிலே ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார் அவர் ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வந்தபோது அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு 4 அடி தள்ளி தன்னுடைய எல்லைகளை விரிவாக்கி இவருடைய நிலத்தை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவரை கட்டி விட்டதால்  இவருக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. திட்டி தீர்த்து விட்டார் அப்பொழுது ஒருவர் கேட்டார் ஏன் நீங்க எதற்காக இவ்வளவு விலை கூடுதலான நிலத்தை விட்டு கொடுக்கிறீர்கள். நீங்க போலீசுக்கு போகலாமே. கோர்ட்டில் வழக்குத் தொடரலாமே என்று சொன்னதற்கு அவர் சொன்ன ஒரு காரியம் இந்த பாழாய்ப்போன மண்ணுக்காக கோர்ட்டு வாசலுக்கும் போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்கும் போக கூடாது என்றார்.அந்த காரியத்தை நான் விட்டு விட்டேன்.போனால் போகட்டும் என்றாராம்.ஆனால் பல வருடங்களுக்கு பிறகு அந்த நிலத்தை அபகரித்தவர் மரித்து போனாலும் அவர் சந்ததியில் சாபம் வந்தது.அந்த குடும்பத்தில் மரணங்கள் உபத்திரவங்கள் அனுமதிக்கப்பட்டது.

இன்றைக்கு அந்த வீடு பாழடைந்து போய் இருக்கிறது.பிதாக்கள் செய்த பாவம் பிள்ளைகள் மடியில் சரிகட்டப்பட்டது.ஆனால் நிலத்தை விட்டு கொடுத்த இவரது சந்ததியினர் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்.லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்து பசுமையான நிலத்தை ஆக்கிரமித்தான்.

ஆபிரகாமோ லோத்துவுக்கு விட்டு கொடுத்தான்.லோத்து பிரிந்து போனவுடன் தேவன் ஆபிரகாமை பார்த்து நீ பார்க்கும் இடமெல்லாம் மற்றும் நீ நடக்கும் இடமெல்லாம் உனக்கு தருவேன் என்று அவனை ஆசீர்வதித்தார்.ஆனால் நிலத்தை தன் சுய சித்தத்தின்படி பெற்று கொண்ட லோத்தும் அவனது குடும்பத்தாரும் சோதாம் கொமாரா ஜனங்களாலே சிறை பிடித்து கொண்டு போகப்பட்டார்கள்.

 

ஒரு வேளை உங்கள் குடும்பத்தார் உங்களுக்கு தர வேண்டிய நிலத்தை தர மறுக்கலாம். உங்களுக்கு வர வேண்டியதை அன்போடு கேளுங்கள்.ஆனால் அவர்களை குற்றவாளியாக தீர்த்து வழக்கு தொடராதீர்கள்.ஒரு வேளை அவர்கள் தர மறுத்தால் விட்டு கொடுங்கள்.நீங்கள் விட்டு கொடுக்கும் போது நிச்சயம் தேவனால் இரட்டிப்பான நன்மையை பெறுவீர்கள்.

ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கிறார்.அவர் நிச்சயம் உங்களுக்கு நீதி செய்வார்.

 

மத்தேயு 19-29 ல் என் நிமித்தம் வீட்டையாவது நிலத்தையாவது விட்டவன் நூறத்தனையாக அடைந்து நித்திய ஜீவனையும் சுதந்தரித்து கொள்வான் என்று இயேசு சொன்னார்.

 

மத்தேயு 18 ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து சொன்ன உவமையில் கடன் வாங்கியவன் அவன் எஜமானிடத்தில்  கொஞ்ச காலம் பொறுத்து கொள்ளும் உம் கடனையெல்லாம் அடைத்து தீர்த்து விடுகிறேன் என்று கெஞ்சுகிறான். எஜமான் அவனுக்கு இரங்கி அவனது கடனையெல்லாம் மன்னித்து விடுகிறான்.ஆனால் இவனோ தன்னிடம் கடன் வாங்கியவனின் கடனை மன்னிக்காமல் அவனை அடித்து சிறைச்சாலையில் போடுகிறான். இதை அறிந்த இவனது கடனை மன்னித்த எஜமான் அவனை பார்த்து

பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

 

இயேசு சொல்லி கொடுத்த ஜெபத்தில் எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்றார். பிறர் நமக்கு எதிராக செய்த தப்பிதங்களை மன்னிக்காதபடியால் தேவனிடமிருந்து மன்னிப்பை பெற்று கொள்ளாத நாம் விடுதலையடையாமல் சிறையிருப்பில் இருக்கிறோம்.

 

காணிக்கை போடுவதற்கு முன்பாக கூட சகோதரனோடு உள்ள குறையை சரி செய்து விட்டு காணிக்கை போடு என்று இயேசு சொன்னார்.இன்றைக்கு பலர் குடும்ப பிரச்சினைகளினால் அநேகரோடு பேசுவதில்லை. அநேகரின் இருதயத்தில் காயங்கள். தங்களுக்கு தீங்கு செய்தவர்களை மன்னிப்பதுமில்லை. தாங்கள் செய்த தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதுமில்லை. இவர்கள் தேவனிடமிருந்து விலை மதிக்க முடியாத மன்னிப்பை பெற்று கொள்வதுமில்லை.

ஆனால் ஆலயத்துக்கு ஒழுங்காக போகிறார்கள்.ஆலயத்தில் பொறுப்புகளை வகிக்கிறார்கள், பலர் ஊழியமும் செய்கிறார்கள். ஆனால் என்ன பிரயோஜனம். சத்தியத்தை அறியவில்லை எனவே சத்தியத்தின்படி நடப்பதில்லை. இயேசுவோ சத்தியத்தையும் அறிவீர்கள்,சத்தியம் விடுதலையாக்கும் என்றார்.இவர்களோ இருதயத்தில் மந்தமாக கேட்டு தங்கள் கண்களை விலக்கி மூடி கொள்கிறார்கள்.

 

ஆகையால் நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.  பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.  மத்தேயு 5:23-26

 

இதில் சொல்லப்பட்ட எதிராளி சாத்தானை குறிக்கிறது.நீங்கள் உங்கள் சகோதரனோடு நல்மனம் பொருந்தி ஒப்புரவாகவில்லையென்றால் உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்பு கொடுக்கப்படுவீர்கள்.

இது ஒரு பயங்கரமான ஆவிக்குறிய சிறையிருப்பு. இன்றைக்கு அநேகர் நமக்கு எதிராய் செய்த தப்பிதங்களை மன்னிக்காமலும் நாம் பிறருக்கு செய்த தப்பிதங்களுக்காக அவர்களோடு நல்மனம் பொருந்தி மன்னிப்பு கேட்காமலும் இருக்கிறபடியால் நாம் பிறரை சிறைக்குள் வைத்தபடியால்  நம்மை நாமே சிறை வைக்கிறோம்.

இன்றைக்கு அநேக சத்தியத்தை அறிந்த கிறித்தவர்கள் நோயின் பிடியிலும் உபத்திரவத்தில் மத்தியிலும் இருந்து விடுதலை பெறமுடியாமல் சிறையிருப்பில் இருப்பதற்கு இது தான் உண்மை.இயேசு சொன்ன வசனத்தை கவனமாக படியுங்கள்.

 

ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். லூக்கா 6:36,37

 

இன்றைக்கு உங்களை சுயபரிசோதனை செய்து பாருங்கள்.நீங்கள் எத்தனை பேரை குற்றவாளிகளாக தீர்த்து சிறையிருப்பில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அவர்களை விடுதலை பண்ணாமல் நீங்கள் விடுதலை பண்ணபட மாட்டீர்கள்.நீங்கள் விடுதலை செய்தால் தான் உபாதிக்கிறவர்கள் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.

 

லூக்கா 6-46 ல்  என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? என்று இயேசு கேட்கிறார்?

சும்மா ஆலயத்துக்கு போகிறோம்.காணிக்கை கொடுக்கிறோம்.ஆனால் சத்தியத்தின்படி செய்வதில்லை.அப்படி தானே.இயேசு சொன்னதை கவனியுங்கள்

 

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மத்தேயு 12:6,7.... ஆமென்.

bottom of page