நகை அணியக்கூடாது என்று வெளிப்புறமான பாரம்பரியத்தை பிடித்து கொண்டு தேவ நீதியை விட்டுவிட்டவர்களே!!?
நகை போடக் கூடாது, நகை அணிபவர்கள் தீட்டு பட்டவர்கள் என்று வைராக்கியமாக தங்கள் சபைகளின் உபதேச சட்டங்களை பிரசங்கிக்கும் ஊழியக்காரர்கள் இந்திய சட்டத்துக்கு எதிரான வரதட்சணை வாங்க கூடாது என்று ஏன் சபையில் சொல்வதில்லை.பெண்ணின் தந்தை கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அநியாயமாக அபகரிக்கும் வரதட்சணை பணத்தை ஆசீர்வதிக்க ஏன் போகிறீர்கள். இந்து மனுதர்மத்தின் அடித்தளமான சாதிக்கு எதிராக ஏன் சபையில் பேசுவதில்லை. நீங்கள் என்ன தான் பாரம்பரிய பெந்தேகோஸ்தே உபதேசத்தில் இருந்து கொண்டு உயர்ந்த சத்தியங்களை போதிக்கிறோம், கேட்கிறோம் என்று சொன்னாலும் நீங்கள் இந்துத்துவாவின் அடித்தளமான சாதி வெறிக்கு அடிமையாக தானே இருக்கிறீர்கள். நீங்கள் நகையை கழற்றினாலும் உங்கள் திருமணங்கள் எல்லாம் சாதி பார்த்து மிகவும் ஆடம்பரமாக தானே நடக்கிறது? நகைக்கு பதிலாக விலை உயர்ந்த உடைகள் கைகடிகாரங்களை அணிந்து கொண்டு உங்கள் பணக்காரத்தனத்தை தானே திருமணத்தில் காட்டுகிறீர்கள்? சபையில் நகையை கழற்றி கொண்டு வெள்ளை உடையில் ஒரு வேஷம்.அதன் பின் திருமண மண்டபத்தில் விலை உயர்ந்த உடைகள் கைக்கடிகாரங்கள் சிகை அலங்காரங்கள்.
நகை போடக்கூடாது, மீசை வைக்க கூடாது,ஜீன்ஸ் Pant அணியக்கூடாது TV பார்க்க கூடாது, பவுடர் போடக்கூடாது என்பதில் வைராக்கியம் காட்டும் பாரம்பரிய பெந்தேகோஸ்தே ஊழியக்காரர்கள் வரதட்சணை பணத்தில் தசமபாகம் வாங்குவது ஏன்?
புறம்பான பரிசுத்தத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்ற இருதயத்தில் மறைந்திருக்கும் சாந்த முள்ள ஆவியுமான மனத்தாழ்மையுமான இருதயத்தில் மறைந்திருக்கும் முக்கியமான குணத்தை எப்போதோ விட்டு விட்டீர்கள்.
நகையை மாத்திரம் கழற்றினால் போதும் என்ற ஊழியக்காரர்கள் தங்கள் விசுவாசிகள் தங்கள் சகோதரர்கள் உடன் வருடக்கணக்காக பேசாமல் சொத்துக்காக court ல் வழக்காடுவதை ஏன் கண்டு கொள்வதில்லை.
சகோதரனோடு உள்ள குறையை சரி செய்து விட்டு காணிக்கை போடு என்று இயேசு சொன்ன தேவ நீதியை செய்யாமல் குடும்பத்தினரிடம் சொத்துக்காக சண்டை போட்டு கொண்டிருப்பவர்களிடம் காணிக்கை தசமபாகம் வாங்குவது ஏன்?நீங்கள் உண்மையிலே தேவ நீதியை விட உங்கள் பாரம்பரிய சபை சட்டங்களையே ஜனங்கள் மேல் திணிக்கிறீர்கள்.
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள், தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். மத்தேயு 23-4
இன்றைக்கு நகையை கழற்றின பெரும்பாலானவர்களின் சுயநலத்தையும் கள்ளமும் கபடத்தையும் பார்த்து புற மதத்தினர் கேவலமாக சொல்கின்றனர்.
ஏனென்றால் நகையை கழற்றியவர்களை பரிசுத்தவாட்டிகள் அதாவது Saints என்ற கோணத்தில் புறமதத்தினர் பார்க்கின்றனர்.
ஆனால் நகையை கழற்றியவர்கள் பெரும்பாலோரிடம் நாங்கள் ஆவிக்குறியவர்கள் என்று வீண் பெருமை தான் இருக்கிறது. இவர்களில் ஆவியின் கனிகளால் நிறைந்து தேவனுக்கு பயந்து சாட்சியாய் வாழ்கிறவர்கள் வெகு சிலரே..
இத்தகய ஊழியக்காரர்கள் மீசை வைக்க கூடாது, தாடி வளர்க்க கூடாது, நகை போடக்கூடாது, வெள்ளை உடை தான் அணிய வேண்டும் என்று சபை ஜனங்களை சபை பாரம்பரியத்துக்கு நேராக வைராக்கியமாக வழி நடத்தினாலும், ஜனங்களை பரலோகத்துக்கு நேராக ஒரு போதும் வழி நடத்துவதில்லை.
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். மத்தேயு 23-15
தமிழ் நாட்டில் TPM போன்ற சில பாரம்பரிய பெந்தேகோஸ்தே சபைகளில் சலுகைகளுக்காக தங்களை இந்து என்று அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்டு ஞாயிற்று கிழமைகளில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டு நீர் மாத்திரம் போதும் என்று தேவனை ஆராதித்து கொண்டு மற்ற நாள்களில் வேலைத்தலங்களில் தங்களை இந்து என்று சொல்லி கொண்டு இயேசுவை மறுதலித்து கொண்டு இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்து பொய்யான மாயமாலமாக உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்கிற (சில) கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அந்த சபையில் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் பல தலைமுறை கிறிஸ்தவர்கள். நேற்றோ, இன்றோ கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் அல்ல. சலுகைகளுக்காக இந்து என்று தங்கள் பிள்ளைகளை இன்றும் பதிவு செய்கிறார்கள். கிறிஸ்துவையும் அரசாங்கத்தையும் ஏமாற்றி கொண்டிருக்கிற இந்த பேலியாளின் மக்களுக்கு சத்தியத்தை சொல்லாமல் நகையை கழற்று என்று சொல்லி கொள்ளும் குருடருக்கு வழிகாட்டும் குருட்டு ஊழியக்காரர்களே இவர்களையும் இவர்கள் பிள்ளைகளின் சான்றிதழ்களை வாங்கி பாருங்களேன்.
இத்தகயவர்களின் பிள்ளைகளின் திருமணங்கள் சபையில் நடப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியாதா?ஏன் திருமண மண்டபங்களில் நடத்துகிறார்கள்? ஏனென்றால் சபையில் நடத்தினால் அரசாங்கம் இவர்களை கண்டு பிடித்தால் வேலை போய்விடும்.அப்படி திருமண மண்டபத்தில் நடக்கும் இவர்களில் திருமணத்தை பாருங்கள்.நகை போடுகிறவர்கள் கூட தோற்று போவார்கள்.அந்த அளவுக்கு நகை அணிந்திருப்பார்கள்.
தங்கள் திருமண காரியங்களை தங்கள் சபை போதகர்களுக்கு கூட தெரியப்படுத்த மாட்டார்கள்.ஒரு வேளை போதகர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை. அடுத்த ஞாயிற்று கிழமையில் அவர்கள் நகையை கழற்றி விட்டு பரிசுத்த பந்தியில் ஏதும் நடக்காதது போல ஸ்தோத்திரம் போட்டு கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள்.
கிறிஸ்துவையும் சபையையும் ஏமாற்றி இரட்டை வேடம் போடும் இவர்களிடம் தசமபாகத்தை மாத்திரம் வாங்கி கொண்டு அவர்கள் அநியாயத்தை கண்டித்து உணர்த்தாத போதகர்கள் அவர்களை வெளிப்புறமான பாரம்பரியத்துக்கு நேராக மாத்திரம் வழி நடத்தி நரகத்தின் பிள்ளைகளாக்குகின்றார்கள்.மேலும் நாங்கள் தான் பரலோகம் போவோம் எங்கள் சபை உபதேசம் தான் உயர்ந்தது.மற்றெதெல்லாம் குப்பைகள் என்ற பெருமை வேறு பேசி கொள்வார்கள். உங்கள் உபதேசம் உயர்ந்தது என்றால் நீங்கள் கிறிஸ்துவை போல என்றைக்கோ மாறியிருக்க வேண்டுமே?! அன்றைக்கு பார்த்த அதே மாம்சத்தின் கிரியைகள் தான் இன்றைக்கும் இருக்கிறது.நம்முடைய நீதி புற ஜாதிகளில் நீதியை விட தரம் தாழ்ந்து இருக்கும் போது சபையை குறித்து வீண் பெருமை பேச என்ன இருக்கிறது.
இவர்கள் தங்கள் விசுவாசிகள் வேறு சபைக்கு மற்றும் Convention கூட்டங்களுக்கு போக அனுமதிப்பதில்லை.ஒரு முறை ஒரு சகோதரி தன் உறவினரான இந்த சபையை சேர்ந்த வாலிபனை பக்கத்தில் நடக்கும் Father பெர்க்மான்ஸ் கூட்டத்திற்கு அழைத்து கொண்டு போகும்படி கேட்டார். அந்த பையனும் அவர்களை அழைத்து கொண்டு போனான்.Convention நடக்கும் இடம் வந்த போது இந்த வாலிபன் உள்ளே வர மறுத்தான். தம்பி நீ வரவில்லையா என்று அந்த வாலிபனிடம் கேட்ட போது...ஜயோ எங்கள் சபையில் யாராவது பார்த்து Pastor யிடம் சொன்னால் பிரச்சனை ஆகிவிடும் என்றார்.இவர்களின் பயமெல்லாம் Pastorஐ கண்டு தான்.நீ சினிமா தியேட்டருக்கு போனாலும் பரவாயில்லை வேறு சபைக்கு போய்விடக் கூடாது.
புதிதாக கிறிஸ்துவை ஏற்று கொண்டு வெளி நாட்டில் படிக்கும் இத்தகய சபையை சார்ந்த பெண்ணிடம் நீ TPM சபையை தவிர எந்த சபைக்கும் போகக்கூடாது என்று அவரது ஊழியக்காரர் கட்டளையிட்டிருந்தார். அந்த தேசத்திலே நல்ல அருமையான சபைகள் இருந்தும் அந்த பெண் சபைக்கு போவதில்லை. ஞாயிற்று கிழமை சபை ஆராதனைக்கு அழைத்தால் எங்க பாஸ்டர் வேறு சபைக்கு போகக்கூடாது என்று சொல்லியிருக்கிறார் என்று சபை ஆராதனைக்கு வர மறுத்தார்.பல நாள்களுக்கு பிறகு அந்த பெண் காதலுக்கு அடிமையாகி ஒரு வாலிபனோடு Beach சினிமா என்று சுற்றி கொண்டிருக்கிறாள்.
இதற்கு யார் காரணம்?
ஊழியக்காரர்கள் தானே! உங்கள் பிரிவை சார்ந்த சபை இல்லாத இடத்தில் வேறு சபைக்கு சென்று ஆராதிப்பதில் என்ன தவறு.நாளைக்கு இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது கூட,எங்கள் பாஸ்டர் அனுமதியில்லாமல் வரமாட்டோம் என்பார்கள்.
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். மத்தேயு 15-6
நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள், மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். மாற்கு 7-8
குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மத்தேயு 23-26
சமீபத்தில் ஒரு சபைக்கு ஊழியம் செய்ய போன ஒரு பாரம்பரிய பெந்தேகோஸ்தே சபையின் ஊழியக்காரர் சுடிதார் போட்ட ஒரு பெண்ணை திட்டி தீர்த்து விட்டார்.சுடிதார் sexy ஆன உடையாம்?! புடவை அணிய வேண்டுமாம்!
மற்றொரு ஊழியக்காரர்: கால் கழுவாத சபையில் பரிசுத்த பந்தியில் பங்ககெடுக்க கூடாது என்று அந்த சபையில் சொல்ல பிரச்சனையாகிவிட்டது. அன்றிலிருந்து சிலர் பல வருடங்களாக பரிசுத்த பந்தியில் பங்கெடுப்பதில்லை.
இன்றைக்கு தெருவில் தண்ணீருக்காக கெட்ட வார்த்தை பேசி சண்டை போடும் நகையை கழற்றிய பரிசுத்தவாட்டிகளை இத்தகய ஊழியக்காரர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் நகை போட்டால் தீட்டு.தீட்டுபட்டவள் என்று துள்ளி குதிக்கின்றனர்.
இவர்கள் தேவ நீதியை எங்கோ தொலைத்து விட்டார்கள். இவர்கள் தங்களிடமும் தங்கள் ஊழியத்திலும் தங்கள் குடும்பத்தாரிடமும் காணப்படும் முரட்டாட்டங்களை ஒரு போதும் நிதானித்து அறிவதில்லை மாறாக ஓயாமல் அடுத்த ஊழியங்களை குறை சொல்லி கொண்டேயிருக்கிறார்கள். நகையை கழற்றினால் தான் ஞானஸ்நானம் கொடுப்போம் என்கிறவர்கள் இருதயத்தில் காணப்படும் பிறர் மேல் உள்ள கசப்பு கோபம் பொறாமை எரிச்சல் புறம் கூறுதல் வீண் பெருமை மேலும் கள்ளம் கபடம் போன்ற மாம்சத்துக்குறிய கிரியைகளை களைந்து போட வழி நடத்துவதில்லை, குறை சொல்லும் நோக்கில் இது எழுதப்படவில்லை. ஆவிக்குறியவர்கள் என்று சொல்லி கொள்ளுகிற நாம் மற்ற சபைகளுக்கு போகும் ஜனங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமல்லவா.குறைகளை நிதானித்து அறிந்து திருத்தி கொள்ளும் போது நிச்சயமாக நிறைவு வரும்.
எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ரோமர் 10-3