பூமிக்கடுத்தவைகள்
யோவான் மூன்றாவது அதிகாரம் 31வது வசனத்தில் உன்னதத்தில் இருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர் பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாய் இருந்து பூமிக்கு அடுத்தவைகளை பேசுகிறான் பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வசனத்தின் மூலம் பரலோகத்தின் தேவனுக்கு பிரதிநிதிகளாக ஊழியம் செய்யும் நம்மிடம் பரலோகத்தின் தன்மை இல்லை.என் ஆத்துமா மண்ணோடு ஒட்டி கொண்டிருக்கிறது என்று தாவீது சொன்னது போல அநேகர் உலகத்தின் ஆசை இச்சைகளோடு இணைந்து கொண்டிருக்கிறோம்.
வானத்தையும் பூமியையும் படைத்த பரம அதிகாரங்களை உடைய ராஜாக்களுக்கெல்லாம் அதிபதியான இயேசுவுக்கு பிரதிநிதி என்கிற ஊழியக்காரர்கள் அரசியல்வாதிகளை சந்தித்து Photo க்கு Pose கொடுப்பதும் தங்கள் ஆதாயத்துக்காக அவர்களை அழைத்து பிரசங்க மேடைகளில் கௌரவிப்பதும் தவறானது தானே. ஒவ்வொரு காரியத்தையும் எந்த நோக்கத்துக்காக செய்கிறோம் என்று யோசித்து பாருங்கள்.
-
உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.உலகத்துக்கு சிநேகிதன் தேவனுக்கு பகைஞன்.
-
உலகத்தையும் தேவனையும் நேசிக்கும் ஆவிக்குறிய விபச்சாரம்.
-
தேவன் அனுமதிக்காததை ஊழியத்தில் செய்கிற ஊழியக்காரர்களே.
-
இன்றைக்கு உங்களை நிதானித்து அறியுங்கள்.
தேவ சமூகத்தில் நின்று அவர் குரலை கேட்கிற மேலும் பரலோக மகிமையால் நிரப்பபடுகிற எந்த ஊழியக்காரனும் தங்களை உயர்த்தி கொள்வதற்காக தேவன் அனுமதிக்காத அதாவது அற்ப காரியங்களை தங்கள் ஊழியத்தில் ஒரு போதும் செய்ய மாட்டான்.குதிரைகளோடும் இரதங்களோடும் தன் வீட்டுக்கு வந்த ராஜாவால் அனுப்பபட்ட படை தளபதியான நாகமானிடம் இருந்து காணிக்கையை கூட பெற்று கொள்ளவில்லை. அவனுக்கு சுகத்தை பெற்று தந்த எலிசாவுக்கு நன்றாகவே தெரியும்...இவர்களை விட தன் தேவன் பெரியவர்.
இன்றைக்கு நாம் ஊழியம் செய்கிறோம் ஆனால் நம்முடைய காரியங்கள் எல்லாமே பூமிக்கு அடுத்ததாக இருக்கிறது.நமக்கும் உலகத்தானுக்கும் வித்தியாசம் இல்லை.உலகத்தார்கள் பெருமையினால் எதை செய்கிறார்களோ அதையே ஊழியத்திலும் செய்ய ஆரம்பித்துவிட்டோம். இயேசுவோ நான் உலகத்தான் அல்லாதது போல இவர்களும் உலகத்தார்கள் இல்லை என்று இயேசு சீஷர்களை குறித்து சாட்சி கொடுத்தார்.
நாம் பரலோகத்தின் பிள்ளைகள் மேலும் பரலோகத்திலிருந்து வந்த பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு என்றால் பரலோகத்தின் தன்மை உடையவர்களாக இருந்து இயேசு கிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேலான காரியங்களை பார்க்கும் படி நாம் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
கொலோசேயர் 3-2 ல் பூமியிலுள்ளவைகளையல்ல மேலானவைகளை நாடுங்கள்.நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது நீங்களும் அவரோடே கூட மகிமையில் வெளிப்படுவீர்கள்.
தேவன் நமக்கு வைத்திருக்கும் மகிமையை அறிந்த ஊழியம் செய்கிற எவனும் தன்னை உயர்த்தி கொள்ள மாட்டான்.
ஒரு ஊழியக்காரர் உணவு சமைத்துத் திக்கற்றோருக்கு கொடுத்து கொண்டிருந்தார். முதலில் அவர் தன் ஊழியத்தை அருமையாக செய்து கொண்டிருந்தார். திடீரென்று தன்னை பற்றி வீடியோ எடுத்து சுய விளம்பரம் செய்து கொண்டார், அதை பார்த்த அநேகர் அவரை துதி பாட ஆரம்பித்து விட்டார்கள். அநேகர் பணம் அனுப்பினார்கள். உடனே அவர் தன் விளம்பரங்களை பரப்ப ஆரம்பித்து விட்டார். இறுதியில் வீண் புகழ்ச்சியை விரும்பி தன்னை மேன்மைபடுத்த ஆரம்பித்துவிட்டார். இவர் பிரபலமானாலும் இவருடைய வீழ்ச்சியை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? சாத்தான் இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் ராஜியங்களை காட்டிய போது இயேசு அப்பாலே போ சாத்தானே என்று சொல்வதை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை? பிரசங்க பீடத்தில் நீர் பெருகவும் நன் சிறுகவும் வேண்டும் என்று தேவனை நோக்கி சொல்லுகிறவர்கள் இடங்கொண்டு பெருகி கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு முறை ஒரு ஊழியக்காரர் மந்திரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குடும்பம் தான் ஜெபம் பண்ணிய போது விடுதலை பெற்றதாக ஒரு சாட்சியை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் சில நாள்கள் கழித்து ஒருவரிடம் ஊழியம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன், எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். இவர் தன் தேவைகளுக்காக தன்னை அழைத்த தேவனை விட்டு விட்டு மனிதனை நம்புவதால் கடைசி வரை மனிதர்களை நம்பியே இருப்பார்.
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். சங்கீதம் 118-8
இன்றைக்கு அநேக உண்மையும் உத்தமுமான ஊழியக்காரர்களின் பணத்தேவைகளை அவர்கள் கேட்காமலே தேவன் சந்திக்கிறார். ஆனால் அநேக ஊழியக்காரர்களின் கண்கள் ஊழியத்தில் அற்புதம் நடக்க எஜமானின் கைகளை நோக்கியிருக்கிறது. ஆனால் இவர்களது கண்கள் பணத்தேவைகளுக்கு மட்டும் மனிதர்களை நோக்கியிருக்கிறது.
மத்தேயு 6 ம் அதிகாரத்தில் மனுஷரால் புகழப்படுவதற்கு தர்மம் செய்யாதீர்கள்.தாரை ஊதுவியாதீர்கள். அந்தரங்கமாக செய்யுங்கள். அப்பொழுது பிதாவானவர் வெளியரங்கமாக பலனளிப்பார் என்று இயேசு சொன்னதை கேட்டும் இன்றைக்கு தங்களை பற்றியும் தங்கள் ஊழியங்களை பற்றியும் தாரை ஊதுகிறவர்களே அதிகம்.இவர்கள் பூமியிலே மனித புகழ்ச்சியை பெற்று விட்டதால் பிதாவாகிய தேவனால் எதையும் பெற்று கொள்வதில்லை. அதாவது ஊழியத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன ரகசியங்களை அறிந்து கொள்ளவில்லை.
யோவான் மூன்றாவது அதிகாரம் 27 வது வசனத்தில் பரலோகத்திலிருந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் ஒழிய அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டான் என்று இயேசு சொன்னார்.ஊழியம் செய்கிறவர்கள் பரலோக வல்லமைகளையும் வரங்களையும் தேவ ஞானத்தையும் பெற்று கொண்டு மனித புகழ்ச்சியை தேடி தங்களை தாங்களே உயர்த்தி கொண்டு தேவ மகிமையை இழந்து போய்விடுகிறார்கள்.
இன்றைக்குப் பெரும்பாலான ஊழியக்காரர்கள் விளம்பர பிரியர்களாக இருக்கின்றார்கள். தங்களை பற்றி தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் பூமிக்கடுத்தவைகளை தேடி பூமியின் தன்மை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். பரலோகத்தின் தன்மை அவர்களிடம் இல்லை அதாவது வசனம் சொல்லுகிறது அவருடைய மகிமையைக் கண்டோம் அது பிதாவுக்கு ஒரே பேரான அவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமை ஆகவே இருந்தது என்று இப்படிப்பட்ட மகிமையான தேவனை கொண்டிருக்கிற அவருக்கு ஊழியம் செய்கிற ஊழியக்காரர்கள் ஒருபோதும் சுய விளம்பரம் செய்ய மாட்டார்கள்.
சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. 1 கொரிந்தியர் 9-16
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2 கொரிந்தியர் 10-18
மேல் சொல்லப்பட்ட வசனங்களை ஆராய்ந்து பாருங்கள்.தேவன் உங்களை உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே என்று அழைப்பாரா?
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12-7
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். எபிரேயர் 3-2
தேவன் மோசேயை குறித்து சாட்சி கொடுத்தது போல நம்மை குறித்து சாட்சி கொடுக்க முடியுமா?
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 1 தீமோத்தேயு 1-12
என்று பவுல் சொல்லும் வசனத்தின் படி இன்றைக்கு நாம் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லையே. வீண் புகழ்சிக்காகவும் பணத்துக்காகவும் தேவ சித்தத்தை விட்டு விட்டு சுய சித்தம் செய்து கொண்டிருக்கிறோமே!! ஊழியம் என்ற பெயரில் நம் எஜமானனை துக்கப்படுத்தி கொண்டிருக்கிறோமே! ஆரம்ப காலத்தில் பரலோகத்தோடே இணைக்கப்பட்டிருந்த நாம் இப்பொழுது பரலோகத்தை விட்டு வெகுதூரம் உலகத்துக்கடுத்தவைகளை நோக்கி வந்து விட்டோமே.சாத்தான் எந்த அளவுக்கு பெருமை என்ற கண்ணிக்குள் நம்மை அடிமைபடுத்தி வைத்திருக்கிறான். சந்திப்பின் நாளிலே இயேசு நம்மை பார்த்து அக்கிரம சிந்தைகாரர்களே உங்களை அறியேன்...என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்லும் நிலைக்கு நம்மை கொண்டு வைத்து விட்டான்.பரலோக தரிசனங்களை விட்டு விட்டு உலகத்துக்கும் அதன் ஆசை இச்சைகளுக்கும் ஒத்த வேஷம் தரித்து மாயமாலமான உலக தரிசனங்களை நோக்கி ஓடி கொண்டிருக்கும் நாம் மனம் திரும்புவோம்.
இன்றைக்கு ஒவ்வொரு ஊழியக்காரரை உற்று நோக்குங்கள் ஏதோ ஒரு காரியத்தில் பெருமையினால் வீழ்ந்து போய் இருக்கிறார்கள் ஏதோ ஒரு காரியத்தில் தங்களை பெருமைப்படுத்தி தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். ஒரு நாள் வரும் அன்றைக்கு தங்களிடம் உள்ள வீண் பெருமையினால் இவர்கள் கீழே தள்ளப் படுவார்கள். பிரியமானவர்களே உங்களுக்கு கொடுத்த ஊழியத்தை உண்மையுமாய் செய்யுங்கள் உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் செய்யாதீர்கள். நாம் பரலோகத்தின் தேவனுடைய ராஜியத்திற்கு மாத்திரமே ஊழியம் செய்கிறோம்.எனவே நீங்கள் தேவனால் பயன்படுத்தபடும் போது உங்களை நீங்களே மகிமைபடுத்த முயற்சி செய்யாதீர்கள். கர்த்தர் உங்களை மகிமைப்படுத்தும் நாள் வரை காத்திருங்கள் அவர் மாத்திரமே உங்களை உயர்த்துவார்.
இன்றைக்கு நான் என்கிற சுயநிதியினால் நாங்கள் செய்தோம் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் நாங்கள் செய்வோம். நாங்கள் பெரிய காரியங்களை செய்கிறோம்.எங்கள் ஊழியத்தில் அப்படி நடந்தது நாங்கள் ஜனங்களுக்காக இவ்வளவு பணத்தை செலவு பண்ணுகிறோம். திக்கற்றவர்களுக்கு உதவி செய்கிறோம் என்கிற அரசியல்வாதிகளை போல விளம்பரங்கள் தான் மேலோங்கி இருக்கிறது பிரியமானவர்களே நீங்கள் தேவானுக்கு செய்த ஊழியங்கள் உங்கள் வீண் பெருமையினால் வீணாகாதபடிக்கு ரொம்ப கவனமாக ஊழியம் செய்யுங்கள். நாளைக்கு தேவன் உங்களை அக்கிரமச் செய்கைக்காரரே என்று சொல்லாத படிக்கு ரொம்ப கவனமாய் மனத்தாழ்மையோடு ஊழியம் செய்யுங்கள்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்.என் நுகத்தை உங்கள் மேல் ஏற்று கொண்டு என்னிடம் கற்று கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னார். இன்றைக்கு அநேகரிடம் இருப்பது பெருமை என்கிற சாத்தானின் நுகம். தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார் என்கிற உண்மையை ஊழியம் செய்கிறவர்களை விட சாத்தான் நன்றாக அறிந்து வைத்திருக்கிறான்.
அநேகருக்கு முன்பாக வீண்புகழ்ச்சி என்கிற கண்ணியையும் தடுக்கலையும் வைத்திருக்கிறான். அநேகர் அதில் மறைமுகமாக சிக்கி கொண்டிருக்கிறார்கள். பிரியமானவர்களே... இன்றைக்கு நம்மை நாமே சுயபரிசோதனை செய்வோம்.நம்மை நாமே நிதானித்து அறிவோம்.
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோசெயர் 3-24
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரிந்தியர் 10-31
ஆமென், ஆமென்.